தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டின் தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களின் பங்களிப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன், கதையாசிரியர் செல்வராஜ், இயக்குநர்கள் பாலா, அமீர், மகேந்திரன், கார்த்திக் சுப்புராஜ், சீனுராமசாமி, நடிகர்கள் விக்ரம், வடிவேலு, ராஜ்கிரண், தயாரிப்பு நிறுவனங்களில் ஏவிஎம் என பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
அந்த வகையில் நகைச்சுவை நடிப்பில் தனக்கு என தனி பாணியை உருவாக்கி தனி முத்திரை பதித்தவர் கடந்த வருடம் இதே நாளில் அகாலமரணம் அடைந்த நடிகர் விவேக்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்த விவேக், தீராத சினிமா தாகம் கொண்டவர். 1986 ஆம் ஆண்டுமுதல் 1992 ஆம் ஆண்டு வரை தமிழக தலைமைச் செயலக ஊழியராக பணியாற்றியவர் விவேக். அரசு ஊழியராக பணியாற்றினாலும் சினிமா மீது கொண்ட காதலால் அரசு வேலையை துறந்து கலைத் துறையில் பயணத்தை தொடங்கினார்.1987 ஆம் ஆண்டு, ‘மனதில் உறுதிவேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான விவேக் அத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அதன் பிறகு, 1989 ஆம் ஆண்டு வெளிவந்த ‘புது புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து,
ஒரு வீடு இரு வாசல், புது மாப்பிள்ளை, கேளடி கண்மணி, இதய வாசல், புத்தம் புது பயணம் எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, வெறும் நகைச்சுவையை மட்டும் வெளிப்படுத்தும் காட்சிகளில் நடிக்காமல் நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தார்.
இதன் மூலம் எண்ணற்ற ரசிகர்களை பெற்றார் நடிகர் விவேக். அவரது நகைச்சுவை பெரும்பாலும் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மரம் வளர்த்தல், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இருப்பதால், இவரை சினிமா ரசிகர்கள் ‘சின்னக்கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைத்தனர்.
அதுமட்டுமல்லாமல், தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வந்த விவேக் நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன் எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வந்தார். திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதுவழங்கி கௌரவித்தது. இவ்வாறு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் நடிகர் விவேக்.
ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவையோடு கலந்த பல சமூகக் கருத்துக்களை விதைத்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்த வந்தவர் விவேக். அவர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவருடைய கருத்துக்கள் வசனங்கள் மூலம் மக்கள் மனங்களில் வாழ்ந்துவருகிறார். அவர் திரைப்படங்களில் பேசிய வசனங்களில் இன்றும் பிரபலமாக மக்களால் பேசப்படும் வசனங்கள்
இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு,
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்,
கோபால்..கோபால், எஸ்.பி-யைத் தெரியும்!…. ஆனா அவருக்கு என்னை தெரியாது ஆகியவை அடங்கும்.
விவேக்கின் நடிப்பிற்காக அவர் பெற்ற விருதுகளின் பட்டியலில் குறிப்பிடத்தக்கவை.
1.இந்திய அரசின்
பத்ம ஸ்ரீ’ விருது.
2.அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகருக்கான
விஜய் விருது
3.2002-ல் ‘ரன்
4.2003ல் ‘சாமி
5.2004-ல்
6.பேரழகன்
7.2007-ல் சிவாஜி ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது
8.உன்னருகே நானிருந்தால்
9.2002-ல் ரன்
10.2003ல் பார்த்திபன் கனவு
11. 2007-ல் சிவாஜிபோன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக தமிழ் நாடு அரசின் மாநில விருது பெற்றுள்ளார்.
ரஜினிகாந்த், கமலஹாசன் அர்ஜூன், சத்யராஜ், ராமராஜன் போன்ற நடிகர்களின் வளர்ச்சியிலும், அவர்கள் நடித்த படங்களின் வெற்றிக்கு கவுண்டமணி,செந்தில், வடிவேலு போன்ற காமெடி நடிகர்களின் பங்களிப்பு இருந்ததை போன்று நடிகர் விவேக்கும் இருந்தார் என்பதுடன் மூன்றாம் தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத்குமார், விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்களின் படங்களின் வெற்றிக்கு விவேக்கின் குணசித்திர நடிப்பும், கமெடியும் பக்கபலமாக இருந்ததை தவிர்க்க முடியாது.
நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்க கூடியது. நகைச்சுவையில் கருத்துக்களை மட்டும் வழங்குவதில் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஒரு சில சமூக நலக் குறிக்கோள்களை கடைபிடித்து, அதனை செயல்படுத்தியும் வந்தவர்.
குறிப்பாகச் சொல்லப்போனால், தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களுக்குப் பிறகு, நகைச்சுவையில் பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர் விவேக் என்று சொன்னால் அது மிகையாகாது. சக நடிகர்களின் வளர்ச்சியில், அவர்களது சிரமங்களில் பகிரங்க படுத்தாமல் உதவிகளை தனது கடமையாக செய்தவர் என அவரது மறைவுக்கு பின் தங்களது பேட்டிகளில், சமூக வலைத்தளங்களில் தகவல்களை திரை பிரபலங்கள்
பகிர்ந்தனர். அதில் குறிப்பிடத்தக்க ஒன்றை அவரது மறைந்த தினமான இன்று நினைவு கூறுவது பொருத்தமானதாக இருக்கும்.
2016ம் ஆண்டு மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர் இறப்பதற்கு முன்பு ஒரு பேட்டியில், தனது மகள் திருமணத்துக்காக நடிகர் விவேக் செய்த உதவியைக் கூறி கண்ணீர் மல்க பேசிய பழைய வீடியோ ஒன்றை பலரும் பகிர்ந்து விவேக்கின் உதவும் மனப்பான்மையை நினைவுகூர்ந்து நெகிழ்ந்தனர்.
நடிகர் குமரிமுத்து 2016ம் ஆண்டு இறப்பதற்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
“நகைச்சுவை நடிகர்களிலேயே கலைவாணருக்குப் பிறகு நான் துணிந்து சொல்வேன், யாரு என் மேல கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. எந்த நகைச்சுவை நடிகர் கோவிச்சுகிட்டாலும் பரவாயில்லை. தம்பி செந்தில்கிட்ட நானே சொல்லியிருக்கிறேன். என் கடைசி பொண்ணுக்கு கல்யாணம். என்கிட்ட காசு கிடையாது, ரொம்ப சிரமம். தம்பி விவேக் கிட்ட போய் சிலோன்ல ஒரு நாடகத்துக்கு கூப்பிடறாங்க. அதுக்கு போனால் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் என் பொண்ணு கல்யாணத்துக்கு கிடைக்கும் என்று சொன்னேன். உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்னு கேட்டார். ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் கிடைக்கும் என்று சொன்னேன். எனக்கு என்ன கொடுப்பீங்க என்று கேட்டார். ஒரு 2 லட்சம் ரூபாய் வாங்கி கொடுக்கிறேன் என்று சொன்னேன். சரி வரன்னுட்டார். ஃபிளைட் டிக்கெட் போட்டுட்டேன். அங்கே பைவ் ஸ்டார் ஹோட்டல்ல ரூம் எல்லாம் போட்டுட்டேன். நாடகமும் முடிஞ்சு போச்சு. மறு நாள் காலையில சாயங்காலம் எனக்கு கரேக்ட்டா 50,000 ரூபாய் கொடுத்தாங்க. நான் ரொம்ப சந்தோஷம். அவர் ரூம் காட்டுங்கன்னாங்க. நானும் கூட்டிப்போனேன். நான் அழுதுட்டேன் சார். என் வாழ்க்கையிலயே சந்தோஷத்தில் அழுதது நான் அன்னைக்குதான். அந்த பிரசாத் வந்து 2 லட்சம் ரூபாயை விவேக் கையில அப்படி கொடுக்கிறாரு. நான் அந்த பக்கம் நிற்கிறேன். அந்த 2 லட்சம் ரூபாயை பிரசாத்துகிட்ட வாங்கி அண்ணே இந்தாங்கண்ணே இந்த 2 லட்சம் ரூபாயை வச்சுக்கோங்க. உங்க பொண்ணு கல்யாணத்துக்காக நீங்க கஷ்டப்படறேன்னு சொன்னிங்களே. உங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்துட்டாங்களா? இந்த 2 லட்சம் ரூபாயை வச்சுக்கோங்க. உங்க பொண்ணு கல்யாணத்தை நல்லா நடத்துங்கண்ணே.” என்று கூறியதை நினைவுகூர்ந்து குமரிமுத்து அழுதுகொண்டே கூறுகிறார்.
மறைந்த நடிகர் குமரிமுத்து இறப்பதற்கு முன்பு அளித்த அந்த பேட்டியில், தனது மகள் திருமணத்திற்கு நடிகர் விவேக் வெளியே தெரியாமல் செய்த உதவியைக் கூறிய வீடியோ சமூக ஊடகங்களில் விவேக் மறைவுக்கு பின் வைரலானது .
நடிகர் விவேக் 1987 முதல் 2016 வரை தமிழ் சினிமாவில் துணை நடிகராக, குணசித்திர நடிகராக, காமெடி நடிகராக, கதாநாயகனாக 29 ஆண்டுகள் தனது பங்களிப்பின் மூலம் மூன்று தலைமுறை நடிகர்களுடனும் நடித்துள்ளார் . அவர் மறைந்துவிட்டாலும் இன்று அவர் திரைப்படங்களில் பேசிய முற்போக்கு கருத்துக்கள், வாழ்வியல் சம்பந்தமான வசனங்கள் அன்றாடம் மக்களால் பேசப்பட்டு வருகிறது. இது தான் ஒரு கலைஞனின் வெற்றி.
**- இராமானுஜம்**