தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் வடிவேலு.
காமெடி ஜாம்பவானாக இருந்த வடிவேலு, சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து ரசிகர்களை மேலும் ரசிக்க வைத்தார். விஷாலுடன் கத்தி சண்டை, லாரன்ஸுடன் சிவலிங்கா திரைப்படங்களில் நடித்தவர் அதைத் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கவில்லை. இம்சை அரசன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து திரையுலகை விட்டு சற்று விலகியே இருந்தார்.
அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும் மீம் கிரியேட்டர்கள் அவரை மக்களுடன் நெருக்கமாகவே வைத்திருந்தனர். டெம்பிளேட்கள் மூலமாகவும், மீம் வீடியோக்கள் வழியாகவும் தினம் தினம் மக்களைச் சிரிக்கவைத்துக்கொண்டே இருந்தார். இவற்றையெல்லாம் கடந்து கமல்ஹாசனுடன், ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்தில் அவர் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்து கமல் தற்போது நடிக்க முடியாத சூழலில் இருப்பதால் படப்பிடிப்பு ஆரம்பமாகச் சற்று தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் வடிவேலு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாதவன், ரம்யா கிருஷ்ணன், மீனா, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன், ஹர்பஜன் சிங் எனப் பலரும் வெப் சீரிஸில் நடித்துவரும் நிலையில் அவர்கள் வரிசையில் தற்போது வடிவேலுவும் இணைந்துள்ளார். அவர் நடிக்கவிருக்கும் காமெடி வெப் சீரிஸ் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் வடிவேலு நடிக்கத் தொடங்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
�,