]வசூல் சாதனை படைத்த இந்திய படங்கள்!

Published On:

| By Balaji

2020ஆம் ஆண்டும் கொரோனா தொற்றால் உலகத் திரையுலகம் பாதிக்கப்பட்டது. உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. திரைப்பட தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

2021 ஜனவரி மாதத்திற்கு பின் திரையரங்குகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கத் தொடங்கின. கொரோனா தொற்றையும் மீறி இந்தியத் திரையுலகத்திற்கு படங்களின் வசூல் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.

இந்த 2021ம் ஆண்டில் இரண்டு தமிழ்ப் படங்கள் உட்பட ஐந்து இந்தியப் படங்கள் உலக அளவில் சாதனை புரிந்துள்ளன. ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்க்ஷய்குமார் நடித்த ‘சூர்யவன்ஷி’ இந்திப் படம் சுமார் 300 கோடி வரை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படம் உலகம் முழுவதும் 240 கோடி ரூபாய் வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்’ படம் 230 கோடி வசூலித்து 3ம் இடத்தையும், வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த ‘வக்கீல் சாப்’ தெலுங்குப் படம் 140 கோடி வசூலித்து 4ம் இடத்தையும், பொயப்பட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த ‘அகான்டா’ படம் 118 கோடி ரூபாய் வசூலைக் கடந்து இப்போதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படம் 5ம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்திய அளவில் வசூலில் டாப் 5 இடங்களில் முதலிடத்தைத் தவிர அடுத்த நான்கு இடத்தில் இரண்டு படங்களாக மாஸ்டர், அண்ணாத்த படங்கள் இடம்பிடிக்க காரணம் இந்தப் படங்கள் தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. முதல் வாரம் முழுவதும் டிக்கெட் கட்டணம் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி விற்பனை செய்யப்பட்டது.

விஜய், ரஜினிகாந்த் இவர்களின் ரசிகர்கள் தமிழகத்தில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகளை தியேட்டர் நிர்வாகத்திடம் இருந்து மொத்தமாக வாங்கியதால் பெரும்தொகை வசூல் கணக்கு அதிகரிக்க காரணமானது. போட்டிக்கு வலிமையான படங்கள் வெளியாகி இருந்தால் வசூல் கணக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்ககூடும்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share