;விமர்சனம்: காக்டெய்ல்

Published On:

| By Balaji

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள காக்டெய்ல் திரைப்படம் ஜீ5யில் ஓடிடி வெளியீடாக வந்துள்ளது.

600 கோடி ரூபாய் விலைமதிப்புள்ள சோழர் காலத்து முருகனின் சிலை ஒன்று கடத்தப்படுகிறது. அந்த சிலையை மீட்க இன்ஸ்பெக்டர் ஷாயாஜி சிண்டே ஒரு திட்டமிடுகிறார். இதனிடையில், ஷாயாஜி சிண்டேவின் வருங்கால மருமகன் மிதுன் தனது நண்பர்கள் யோகி பாபு, பாலா, கவின் ஆகியோருக்கு திருமணத்தை முன்னிட்டு காக்டெய்ல் பார்ட்டி கொடுக்கிறார். நண்பர்கள் பாட்டும் கூத்துமாக பார்ட்டியை கொண்டாடிவிட்டு காலையில் முழித்துப் பார்த்தால், ஒரு இளம் பெண் மர்மமான முறையில் அவர்கள் வீட்டில் இறந்து கிடக்கிறாள்.

போதையில் தாங்கள் தான் கொலை செய்தோம் என நம்பும் நண்பர்கள் இறந்த பெண்ணை மூட்டைக் கட்டி தங்கள் காரில் வைத்துக் கொண்டு தடயத்தை மறைக்க புறப்படுக்கின்றனர். அதே சமயம், கடத்தல்காரர்கள் முருகனின் சிலையை தங்கள் காரில் மூட்டைக் கட்டிக் கொண்டு ‘பார்ட்டியிடம்’ கொடுக்க கிளம்புகின்றனர். மறுபுறம் போலீசார் கொலை, கொள்ளை ஆகிய வழக்குகளில் இந்த இரு குழுக்களையும் பிடிக்க புறப்படுகின்றனர். பல்வேறு சிக்கல்கள் ஒரே பயணத்தில் சந்திக்கும் இந்த கலாட்டாவே காக்டெய்ல்.

கேட்டால் ரசிக்கும்படி இருக்கும் இந்தக் கதையை, நல்ல திரைக்கதையோடு காட்சிப்படுத்தியிருந்தால் நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான படமாக வந்திருக்கும் காக்டெய்ல். ஆனால், நடந்திருப்பதோ இதற்கு நேர்மாறு. ‘ஹேங்ஓவர்’ படத்தின் பாணியில் உருவாகியிருக்கும் இப்படம், அந்த பேச்சிலர் பார்ட்டி டிவிஸ்டை மட்டும் வெறுமனே எடுத்துக் கொண்டு செயல்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் அந்த மர்மத்தில்” எந்தவிதமான பதற்றமும் இல்லை. சில சஸ்பென்ஸை காட்சிகளில் உருவாக்க வாய்ப்பு இருக்கும்போது கூட, அதன் இடத்தில் ஒரு நகைச்சுவையைச் சொருகுவதே இயக்குநரின் பணியாக இருக்கிறது. இதனால் காமெடியும் இல்லாமல், மர்மமும் இல்லாமல், திரில்லரும் இல்லாமல் படம் நகர்கிறது.

யோகி பாபு இன்று வணிக ரீதியாக ஒரு ‘பிராண்ட்’ ஆக மாறியிருக்கிறார் என்பதை நாம் அறிவோம். ஆனால், அவருக்கான நியாயத்தை இயக்குநரும் வழங்கவில்லை, அவரும் வழங்கவில்லை என்பதே நிஜம். படத்தில் நகைச்சுவை காட்சிகள் என வருபவை நம் பொறுமையை நிச்சயம் சோதிக்கக்கூடியவை. நம்மால் போதும் என தாங்கக்கூடிய அளவிற்கும் அப்பால் அவை நீட்டப்பட்டுள்ளன. சரக்கு காமெடி, கணவனை ஏமாற்றும் மனைவி காமெடி, கணவர் மனைவியை ஏமாற்றும் காமெடி, விஜய்-அஜித் படங்களில் வரும் வசனத்தை மாற்றிப் போட்டுப் பேசும் காமெடி என பல வகையிலும் முயற்சித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், இவை நகைச்சுவைக்குக் கூட ஒரு நகைச்சுவையாக இல்லை.

அதுவும் ரவுடியாக வரும் புகழ் ஏன் பெண் குரலில் பேசி நகைச்சுவை என்ற பெயரில் அபத்தத்தை முன் வைக்க வேண்டும் எனப் புரியவில்லை. படத்தில் ஆரம்பத்தில் நீண்ட நேரமாக இழுத்தடித்திருக்கும் அந்த அபார்ட்மெண்ட் காட்சிகளில் சுவாரஸ்யமும் இல்லை, கதைக்கு தேவையான காட்சிகள் மிக மெல்லவே வருகின்றது. அவற்றின் நீளத்தை நிச்சயம் குறைத்திருக்கலாம். படம் சாலையில் பயணிக்கத்துவங்கியவுடன் இனி இது ‘டேக் ஆஃப்’ ஆகிவிடும் என நினைத்தால், அந்த நம்பிக்கை கொஞ்சம் நேரம் கூட நீடிக்கவில்லை.

காக்டெய்ல் – சுவையும் போதையும் இல்லாத ஒரு மிக்ஸிங்.

*இயக்குநர் – ரா விஜய முருகன்; தயாரிப்பு: பிஜி மீடியா ஒர்க்ஸ்; நடிப்பு – யோகி பாபு, மிதுன் மகேஷ்வரன், மைம் கோபி, ‘கே.பி.ஒய்’ பாலா, ஷாயாஜி சிண்டே, ராஷ்மி கோபிநாத்; நேரம்: 2 மணி நேரம் 7 நிமிடம்; இசை: சாய் பாஸ்கர்*

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share