விக்ரம் நடிப்பில் இரண்டு படங்கள் தமிழில் உருவாகிவருகிறது. அதில் ஒன்று மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன். மற்றொன்று, அஜய்ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா.
டிமான்டி காலனி , இமைக்கா நொடிகள் படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவர் இயக்கத்தில் விக்ரமின் 58வது படமாக உருவாகிவருகிறது கோப்ரா. விக்ரமுக்கு நாயகியாக கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். அதோடு, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் படம் வெளியாக இருக்கிறது.
கோப்ரா படப்பிடிப்பு ரஷ்யாவில் துவங்கிய போதுதான் கொரோனா பரவல் அதிகமானது. அதனால் உடனடியாக படக்குழு சென்னை திரும்பியது. அதன்பிறகு, கடந்த டிசம்பரில் தான் படப்பிடிப்பை துவங்கியது படக்குழு. இப்படத்தை மாஸ்டரின் இணைத் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரித்துவருகிறார்.
டிசம்பரில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு எனவும், 30 நாட்களுக்குள் படத்தை முடித்துவிடலாம் என இயக்குநர் சொன்னதால் விக்ரமிடம் தேதிகள் பெறப்பட்டு ஹைதராபாத் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திமுடித்தனர். அதோடு, ரஷ்யாவில் எடுக்க வேண்டிய மீதமிருக்கும் காட்சிகளை சென்னையில் செட் போட்டு படமாக்கவும் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், எதுவும் நினைத்த மாதிரி முடியவில்லை என்றே தெரிகிறது. ஏனெனில், மீண்டும் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்த வேண்டுமென கூறியிருக்கிறார் இயக்குநர்.
ஏற்கெனவே சொன்ன தேதியைத் தாண்டிச் செல்வதால் பெரிய செலவு ஆகியிருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் ஒரு மாதம் கேட்டது தயாரிப்பு தரப்பு அதிர்ச்சியடைந்தாலும், மீண்டும் விக்ரமின் தேதிகளைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
முன்னரே , ஒரு மாதத்தில் கோப்ரா படப்பிடிப்பு முடிந்துவிடும் என்கிற நம்பிக்கையில் பொன்னியின் செல்வன் படத்துக்கு தேதி கொடுத்திருந்தார். அதன்படி, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இருக்கிறாராம் விக்ரம். இங்கு எப்படியும் 35 நாட்கள் வரை படப்பிடிப்பில் விக்ரம் கலந்துகொள்கிறார். அதனால், கோப்ராவுக்கு மார்ச் அல்லது ஏப்ரலில் தேதிகள் ஒதுக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பை ரஷ்யாவில் மேற்கொள்ள இருக்காம் படக்குழு. அதனால், ஏப்ரலில் ரஷ்யா செல்லவும் திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
**-ஆதினி**�,”