தண்ணீருக்காக கெஞ்சிய அணில்: உருகவைத்த வைரல் வீடியோ!

Published On:

| By Balaji

நாம் வீட்டில் வளர்க்கும் சில செல்லப் பிராணிகள், அவற்றிற்கு பசித்தால் நம் கால்களையே சுற்றி சுற்றி வருவதைப் பார்த்திருப்போம்.

நம்முடன் விளையாடியும், நாம் சற்று விலகி சென்றால் கவலை கொண்டும், மீண்டும் அருகில் வரும்போது கட்டி அணைத்தும் நம்மீது அன்பைப் பொழியும் அந்த வாயில்லா ஜீவன்கள் பல நேரங்களில் நம்மை நெகிழ வைத்து விடும். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மட்டுமின்றி சில வனவிலங்குகளின் உணர்வுப் பூர்வமான செய்கைகளும் நம்மைக் கவர்வது உண்டு. அவ்வாறான சில வீடியோக்கள் இணையத்தில் வலம் வருவதைப் பார்த்திருப்போம். அந்த வகையில் தாகத்தில் தண்ணீருக்காக கெஞ்சிய அணில் ஒன்றின் வீடியோ கடந்த சில நாட்களாக சமூக தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா இந்த வீடியோவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘தண்ணீர் கேட்கும் அணில்’என்று குறிப்பிட்டிருந்தார்.

Squirrel asking for water…. pic.twitter.com/JNldkB0aWU

— Susanta Nanda IFS (@susantananda3) July 16, 2020

தாகத்தால் தவிக்கும் அணில் ஒன்று, சாலையில் நடந்து செல்லும் ஒருவரது கையில் தண்ணீர் பாட்டில் இருப்பதைப் பார்த்துள்ளது. அந்த நபரையே பின்தொடர்ந்த அணில், தனது முன்னங்கால்கள் இரண்டையும் உயர்த்தி தண்ணீர் வேண்டும் என்று கேட்பது போல் அந்த நபரை நெருங்கி சென்றது. இதனை உணர்ந்து கொண்ட அவரும் பாட்டிலைத் திறந்து அணிலுக்கு தண்ணீர் கொடுத்துள்ளார். தாகம் தீரும் வரை அதைப் பருகிய அணில் பின்னர் அங்கிருந்து சென்றது.

இரு கைகளையும் உயர்த்தி மனிதர்களாகிய நாம் நமக்குத் தேவையான ஒன்றை பிறரிடம் கேட்டு கெஞ்சுவது போல் அந்த அணிலும் நடந்துகொண்டது. இந்தக்காட்சி இணைய வாசிகளின் இதயங்களை உருகச்செய்துள்ளது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share