தன்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரையில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் தான் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என நடிகை சிம்ரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
1997ஆம் ஆண்டு வெளியான ‘வி.ஐ.பி’ மற்றும் ‘ஒன்ஸ்மோர்’ஆகிய இரு திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். நடிகர் சிவாஜி, நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்த ‘ஒன்ஸ்மோர்’ மற்றும் பிரபுதேவாவுடன் அவர் ஜோடி சேர்ந்த ‘வி.ஐ.பி’ ஆகிய இரு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளியானது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சிம்ரன் ஏராளமான ரசிகர்களை சம்பாதித்தார்.
‘அவள் வருவாளா’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘வாலி’, ‘பிரியமானவளே’, ‘பம்மல் கே.சம்மந்தம்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘வாரணம் ஆயிரம்’ என அவர் நடித்த வெற்றிப்படங்களை இன்றும் ரசிகர்கள் ஆர்வமுடன் விரும்பிப் பார்த்து வருகின்றனர். தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் சிம்ரன் கடந்த வருடம் வெளியான ‘பேட்ட’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் அவர் நடித்த சில திரைப்படங்கள் ரிலீசுக்காகக் காத்திருக்கின்றன.
இந்த நிலையில் திரைத்துறையில் தான் கால் பதித்து 23 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிப்பிட்டு சிம்ரன் [தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.](https://www.instagram.com/p/CCNoz1FFxjK/?utm_source=ig_web_copy_link)
அவர் தனது பதிவில், **“23 ஆண்டுகள் கடந்தும் திரையுலக சகாப்தம் சிவாஜி கணேசன் சார் உடன் பணியாற்றிய அனுபவத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய கனவு அன்று நிறைவேறியது. அவருடைய ஆசிர்வாதம் எனக்குக் கிடைத்தது. பல விஷயங்களை அவர் கற்றுத்தந்தார். எனது நண்பர்கள் விஜய், பிரபுதேவா, ரம்பா, அப்பாஸ் ஆகியோருடன் நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம். என் கடைசி மூச்சு வரை தமிழுக்கும் தமிழருக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,