பாலச்சந்தருக்கு சிலையா, நூலகமா? :ரசிகர்களுக்குள் அழகிய சர்ச்சை!

Published On:

| By Balaji

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற கவியரசர் கண்ணதாசனின் வரிகள் தான் கே.பாலச்சந்தரின் நினைவு நாளன்று(23.12.19) நினைவுக்கு வந்தன. மறைந்த கே.பாலச்சந்தரின் நினைவாக அவரது நினைவு நாளில் ‘கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம்’ மிக மூத்த ரசிகர்களால் தொடங்கப்பட்டிருக்கிறது.

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் அவரது 5-ஆம் ஆண்டு நினைவு தினத்தில் இச்சங்கம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர்கள் ‘கவிதாலயா’ பாபு மற்றும் ‘கவிதாலயா’ பழனிசாமி இருவரும் தான். அதற்கான தொடக்க விழாவில் கே.பாலச்சந்தரைப் பற்றி நடிகர் சிவகுமார் பேசியபோது, “இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், மூன்று முடிச்சு படத்தில் ரஜினி நடிக்கும்போது நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே நீ கருப்பு வைரம் தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய் என்று அன்றைக்கே கூறியவர். அதேபோல், தமிழ்நாட்டின் சினிமாவில் முதல் இடத்துக்கு வந்து இயக்குநர் பாலச்சந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியவர் நடிகர் ரஜினிகாந்த். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் என் கதாபாத்திரத்தை அனைவரும் பேசும்படியாக அமைத்தவர் கே.பாலசந்தர். கே.பாலசந்தரின் இயக்கத்தில் முக்கிய இடம்பெறும் 5 படங்களில் ‘அக்னிசாட்சி’ படமும் ஒன்று. ‘சிந்து பைரவி’ மூலம் எனக்கு அனைவரின் கைதட்டல்களையும் வாங்கிக் கொடுத்தவர் கே.பாலச்சந்தர். சினிமா இருக்கும்வரை அவர் புகழ் மறையாது” என்று சிவக்குமார் உணர்ச்சி ததும்ப பேசினார்.

நடிகர் ராஜேஷ் பேசும்போது, “1974ம் ஆண்டு ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் எடுக்கும்போது தான் நான் அவரை சந்தித்தேன். நேரம் தவறாமையை அவரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். நேர்மையான மனிதர். நான் சினிமாத்துறைக்கு வரும்போது யாசின் என்னிடம் பாலாஜி, கே.பாலசந்தர் ஆகியோரை மட்டும் நம்பு என்றார். ஸ்ரீதர், சேதுமாதவன் மற்றும் கே.பாலசந்தர் ஆகிய மூன்று இயக்குநர்களிடம் தான் தைரியமாகப் பேசுவேன். நீ சினிமாவை நேசிப்பவன், சினிமாவில் வெற்றிபெற வேண்டும் என்று வந்திருக்கிறாய். நீ வெற்றி பெறுவாய் என்றார். குற்றாலத்தில் நானும், சரிதாவும் நடித்துக் கொண்டிருக்கும்போது குற்றாலத்தில் வெள்ளம் வந்துவிட்டது. உடனே, கிளைமேக்ஸை மாற்றி வெள்ளத்தைப் படமெடுத்தார். அவர் அனைவரின் நடிப்பையும் ரசித்து மனமுவந்து பாராட்டுவார். இவரைப் போன்ற ஒரு ஒப்பற்ற மனிதரைப் பார்க்க முடியாது. மறந்து போன சினிமாத்துறையில் ஒப்பற்ற இயக்குநர் கே.பாலசந்தருக்கு ரசிகர்கள் மன்றம் அமைத்ததில் மகிழ்ச்சி. நான் அதற்கு தலைவனாக இல்லாமல் தொண்டனாக பணியாற்றுவேன். அவருக்கு சிலை வைப்பதற்கு முயற்சி எடுப்பேன். 1984-1985, 1985-1986, 1986-1987 ஆகிய மூன்று வருடங்களுக்கான விருது இன்னும் மீதம் இருக்கிறது. அதில் ‘சிறை’ படத்திற்காக எனக்கு விருது இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவிடம் நான் கூறினேன். அவர்கள் ஏன் விழாவை நடத்தவில்லை என்று தெரியவில்லை” என்று சினிமாவின் விடுபட்ட வரலாற்றைக் குறிப்பிட்டு பேசினார்.

நடிகர் நாசர் “எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் மரணம் மரணம் தான். ஆனால், சில மனிதர்கள் தான் தங்கள் வாழ்ந்துகாட்டிய விதத்தில் மரணமில்லாமல் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய முதல் படம் ‘கல்யாண அகதிகள்’ அவருடைய இயக்கத்தில் தான் உருவானது. அப்படத்தில் எனக்கு ஏற்பட்ட முக்கிய நிகழ்வால் இன்னும் அந்த பழக்கத்தை பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். இதுவரை ஒருநாள் கூட நான் காலதாமதமாக படப்பிடிப்பிற்கு சென்றதில்லை. என்னால், ஒரு படப்பிடிப்பு கூட தடைபட்டதுமில்லை. இதற்கு காரணம் இயக்குநர் கே.பாலசந்தர் தான். நேரத்தை தன்னைவிட அதிகமாக மதிக்கக்கூடியவர். கே.பாலசந்தருக்கு சிலை வைப்பதைவிட அவருடைய பழக்க வழக்கங்களையும், படமெடுக்கும் பாணியையும் நடைமுறைக்குக் கொண்டுவருவதுதான் இன்றைய காலகட்டத்திற்கு தேவை. ஏனென்றால், அவர் சைலன்ஸ் என்று கூறிவிட்டால் யாரும் பேசமாட்டார்கள். ஒரே இடத்தில் செட்டை மாற்றிவிட்டு பொருளாதாரத்தையும் குறைப்பார். நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார். இவையெல்லாம் இன்றைய சினிமாவில் இல்லை என்பதை நான் எங்கு வேண்டுமானாலும் கூறுவேன். கே.பாலசந்தர் என்று கூறியவுடன் நினைவிற்கு வருவது அறிவு சார்ந்த சினிமா என்பது தான். அவர் பெயரில் ஒரு நூலகம் அமைய வேண்டும். மேலும், இதுவரை சுமார் 250க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் கட்டமைப்பு போல வேறு எந்த நிறுவனத்தையும் பார்த்ததில்லை” என்று கூறினார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share