நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை அமைத்து சிங்கப்பூரின் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் கெளரவித்துள்ளது.
மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் லண்டன் உட்பட பல்வேறு நாடுகளில் உள்ளது. இங்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்களின் மெழுகு சிலைகள் வைக்கப்படும். பிரதமர் மோடி, நடிகர்கள் அமிதாப்பச்சன், மகேஷ் பாபு, பிரபாஸ், கஜோல், ஐஸ்வர்யா ராய், பிரபு தேவா, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் சிலைகளும் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் புதிய அல்டிமேட் திரை நட்சத்திர அனுபவம் என்ற பகுதியை அறிமுகப்படுத்தியது, இதில் பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோகர் மெழுகு சிலை கடந்த ஏப்ரல் மாதம் வைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் நடிகை ஸ்ரீதேவியின் நினைவைப் போற்றும் விதமாக மெழுகு சிலை வைக்கப்பட்டது.
தற்போது, தமிழில் துப்பாக்கி, மாற்றான், ஜில்லா போன்ற படங்களில் நடித்த தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வாலின் மெழுகு சிலையும் சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம்பிடித்துள்ள முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமை பெற்றுள்ளார் காஜல்.
இதுகுறித்து காஜல் அகர்வால், “என் சொந்த மெழுகு உருவச் சிலையைத் திறக்க உற்சாகத்துடன் காத்துக்கொண்டு இருக்கிறேன். வருகிற 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி சிங்கப்பூரின் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் என் உருவச் சிலையை அறிமுகப்படுத்த உள்ளேன். குழந்தைப் பருவத்தில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இருக்கும் மெழுகு சிலைகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்போது எனது உருவச் சிலையும் அங்கே இடம் பெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
�,