கடந்த பத்து வருடங்களில் விக்ரம் நடிப்பில் எக்கச்சக்கப் படங்கள் வெளியாகியிருந்தாலும் பெரிய ஹிட்டென்று சமீபத்தில் எதுவுமில்லை என்பதே நிதர்சனம். விக்ரம் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்றாலும், அதான் நிஜம். விக்ரமுக்கு 2005ல் அந்நியன் மற்றும் 2011ல் தெய்வத்திருமகள் படங்கள் பெரிய ஹிட். அதன்பிறகு, வந்த டேவிட், ராஜபாட்டை, தாண்டவம், ஐ, 10 என்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச், சாமி 2, கடாரம் கொண்டான் படங்களெல்லாம் அந்நியன் கொடுத்த ஹிட்டினைக் கொடுக்கவில்லை. ஆனால், படத்துக்குப் படம் எதாவது புதிதாக முயற்சி செய்துகொண்டே இருக்கிறார் விக்ரம்.
மீண்டும் பழைய ஹிட்டைக் கொடுப்பதற்கான நம்பிக்கை ஒளியாக விக்ரமுக்கு நான்கு படங்கள் தற்பொழுது உருவாகிவருகிறது. அதிலொன்று கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் வெளிநாட்டு ஷெட்யூலான ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. ஒரு படம் முடிந்தால் நடிகர்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்தப் பின்னரே அடுத்தப் படத்துக்குச் செல்வார்கள். ஆனால், எந்த வித இடைவெளியும் இன்றி, கோப்ரா ஷுட்டிங்கை முடித்த கையோடு, அடுத்தப் படத்துக்கு சென்றுவிட்டார் விக்ரம்.
கார்த்தில் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உருவாகிவரும் படம் ‘சியான் 60’ விக்ரமின் 60வது படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி நடந்துவந்தது. தற்பொழுது விக்ரமும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பொதுவாக, படப்பிடிப்பு துவங்கும்போது பாடல் காட்சிகள், மாண்டேஜ் ஷார்ட்டுகள் எடுக்கப்படும். ஆனால், கார்த்திக் சுப்பராஜ் கொஞ்சம் வித்தியாசமாக, க்ளைமேக்ஸ் காட்சியை படமாக்கி வருவதாக தகவல். விக்ரமும், துருவ் விக்ரமும் ஆக்ரோஷம் கொண்டு சண்டைப் போடும் க்ளைமேக்ஸ் காட்சியாக படமாக்கிவருகிறார்களாம்.
கோப்ரா, சியான் 60 படங்களுக்கு நடுவே மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படமும் விக்ரமுக்கு லைன் அப்பில் இருக்கிறது. முதல் கட்டப் படப்பிடிப்பை விக்ரம் முடித்துவிட்ட நிலையில், சியான் 60 படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் ஷெட்யூலில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது.
இந்த மூன்று படங்கள் மட்டுமின்றி, கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘துருவநட்சத்திரம்’ படமும் 85% தயாராகிவிட்டது. இன்னும் 5 நாட்கள் மட்டுமே விக்ரமிடம் தேதிகள் கேட்டிருக்கிறார் கெளதம் மேனன். படப்பிடிப்பு முடிந்தால், டப்பிங் மட்டுமே பாக்கியிருக்கும். அதையும் முடித்தால் துருவ நட்சத்திரமும் மிளிரத் தயாராகிவிடும்.
**- தீரன் **
�,