தென்னிந்திய நடிகர் சங்கம், சின்னத்திரை கூட்டமைப்பு, தயாரிப்பாளர்கள் சங்கம் என அனைத்து சங்கங்களும் கடந்த ஒரு வருடக் காலத்தில் பிளவுப்பட்டுள்ளன. அதேபோன்ற நிலைமை சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திலும் ஏற்பட்டு அலுவலகத்துக்குப் பூட்டுப்போடும் நிலை ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் தரும் அளவுக்கு களேபரம் ஆகியுள்ளது.
சின்னத்திரை நடிகர் சங்கம் 2013இல் நடிகர் வசந்த்தால் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்துக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும். மொத்தம் 1,800க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓட்டு போட தகுதியுள்ளவராவர்.
2018 இறுதியில் தேர்தல் நடந்தபோது, ரவிவர்மா தலைவராகத் தேர்வானார். 2019 இறுதியில் மலேசியாவில் நடந்த கலை நிகழ்ச்சியில் ரவிவர்மா மீது பணம் கையாடல் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இதையடுத்து, நிர்வாகிகளிடையே எழுந்த கருத்து வேறுபாட்டால், சங்கத்தை கலைத்து, அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி ஒரு தரப்பினர் தீர்மானம் இயற்றினர். ரவிவர்மா தரப்பிலோ, தலைவர் பதவியை விட்டு விலகாமல் மல்லுக்கட்ட, சங்கத்துக்கு பூட்டுப்போடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீஸார் இரு தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்
கடந்த 20ஆம் தேதி, ‛நிர்வாகம் கலைக்கப்பட்டது குறித்து அரசு அதிகாரியை வைத்து பொதுக்குழு கூட்டி கணக்கு வழக்குகளைக் கொடுத்து தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும்’ என காவல் துறையினர் முன் நிர்வாகத்தினர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் இதுகுறித்த விவரம் இன்னும் சங்க உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை எனக்கூறி, மீண்டும் சங்கத்தில் களேபரம் ஆரம்பமாகியுள்ளது.
**-இராமானுஜம்**
�,