முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 106 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் (பிப்ரவரி 13) தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 161 ரன்களும் ரஹானே 67 ரன்களையும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக மோயின் அலி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலந்து அணி, அஷ்வினின் மாயாஜால சுழலில் சிக்கியது. 59.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. பந்து வீச்சில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
195 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ரன்கள் எடுத்தது.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (பிப்ரவரி 15) தொடங்கியதும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். எனினும் விராட் கோலி ஒருபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் ரிஷப் பண்ட், ரஹானே என முன்னணி வீரர்கள் வெளியேறியதால், இந்திய அணி 86 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த அக்சர் படேலும் 7 ரன்களில் வெளியேறினார்.
இதையடுத்து 7ஆவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய அஷ்வின், விராட் கோலிக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். குறிப்பாக அஷ்வின் துரிதமாக ரன் சேர்த்தார். விராட் கோலி, அஷ்வின் ஆகிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்தினர். விராட் கோலி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷாந்த் சர்மா 7 ரன்களிலும், குல்திப் யாதவ் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அஷ்வின் 106 ரன்கள் எடுத்த நிலையில் போல்டு ஆனார். சிராஜ் 16 ரன்களுடன் களத்தில் நின்றார். முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியைவிட இந்திய அணி 481 ரன்கள் முன்னிலை பெற்றது.
482 ரன்கள் அடித்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது இங்கிலாந்து அணி. சிப்லி 25 பந்துகளுக்கு 3 ரன்கள் எடுத்த நிலையில் அக்ஸர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பர்ன்ஸ் 25 ரன்கள் எடுத்தபோது அஷ்வின் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து வந்த ஜாக் லீச் ரன்கள் எதுவும் எடுக்காமல் அக்ஸர் படேல் பந்தில் ஆட்டமிழந்தார்.
லாரன்ஸ் 16 ரன்கள், ஜோ ரூட் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி 53 எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 429 ரன்கள் தேவை.
முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் இரண்டாவது இன்னிங்ஸில் இன்று ஒரு விக்கெட் எடுத்துள்ள அஷ்வின், நாளை நான்காம் ஆட்டத்திலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பது சென்னை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
**-ராஜ்**�,