அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-இன் இந்திய வருகைக்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபரின் அரசுமுறை பயணத்திற்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஒருவர் ‘பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்’ உருவில் 107 கிலோ எடை கொண்ட இட்லிகளை செய்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக நேற்று(பிப்ரவரி 24) இந்தியா வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப் மற்றும் உயர்மட்டக் குழுவினர் வருகை தந்தனர். அவர்களுக்கு அரசு தரப்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்தும் விதமாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
இந்தியா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் ட்ரம்ப் இந்தியாவிற்கு வருகை தந்தது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், சென்னையில் தமிழ்நாடு சமையல்கலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அமெரிக்க அதிபரின் இந்திய வருகைக்கு வித்தியாசமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 107 கிலோ எடையில் டிரம்ப் மற்றும் மோடி உருவினாலான இட்லியை வடிவமைத்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய வருகை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கக்கூடிய ஒன்றாக அமையவேண்டும். அந்த ஆசையை வெளிக்காட்டும் விதமாக இது தயாரிக்கப்பட்டதாக சமையல் கலைஞர்கள் தெரிவித்தனர்.
இந்த இட்லிகளை பலரும் பார்வையிட்டு சென்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”