விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் கடந்த ஜனவரி 13ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி, நாயகியாக மாளவிகா மோகனன் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
திரையரங்கில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற மாஸ்டர் படமானது தற்பொழுது கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் பிரைம் வீடியோவுக்கும் வந்துவிட்டது. அடுத்ததென்ன? விஜய் அடுத்த படம் பற்றிய பரபரப்பு துவங்கியிருக்கிறது. ரசிகர்களும் அடுத்தடுத்து அப்டேட் எதிர்பார்த்துவரும் நிலையில், ஷூட்டிங் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது.
விஜய் நடிக்கும் ‘விஜய் 65’ படத்தை நெல்சன் இயக்குகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படங்களை இயக்கியவர் நெல்சன். இவர் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் செய்தி ஏற்கெனவே வெளியாகிவிட்டது. படப்பிடிப்பு துவங்குவது குறித்த தகவல் தற்பொழுது கிடைத்திருக்கிறது.
பொதுவாக, ஒரு படம் வெளியாகி ஒரு மாதம் இடைவெளி விட்டே அடுத்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் விஜய். அந்த ஒரு மாதம் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்துகொள்ள ஓய்வெடுப்பார். குடும்பத்துடன் அதிகமாக நேரம் செலவு செய்வார். ஆனால், இந்த முறை கொஞ்சம் அதிகமான இடைவெளியை எடுத்துக் கொள்ள இருப்பதாகச் சொல்லப்படுகிறது. விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு மாதம் தள்ளிப்போய் ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறது. இந்த இரண்டு மாதத்துக்குள் டாக்டர் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளையும், விஜய் 65 படத்திற்கான முதல் கட்டப் பணிகளையும் முடித்துவிட நெல்சனுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறதாம்.
சமீபத்தில் தான் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டப்பிங் பணிகள் முடிந்தது. இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகள் தற்பொழுது போய்க் கொண்டிருக்கிறதாம். எப்படியும் பிப்ரவரி இறுதிக்குள் டாக்டர் படப் பணிகள் முடிந்துவிடும். அதன்பிறகு, ஏப்ரலில் துவங்கும் விஜய் படத்தின் படப்பிடிப்பு ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் முடித்துவிடவும் திட்டமிட்டிருக்கிறது படக்குழு. இந்த வருட தீபாவளிக்கு சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினியின் அண்ணாத்த வெளியாவதால், அடுத்த பொங்கலுக்கு தான் விஜய் படத்தை எதிர்பார்க்கலாம்.
**- ஆதினி**�,