நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை படக்குழு அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘டான்’. அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனது தயாரிப்பு நிறுவனமும் தயாரித்து இருக்கிறது. இதில் கல்லூரி மாணவனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
இந்த படம் இந்த மாதம் அதாவது மார்ச் 25ம் தேதி வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், லைகா நிறுவனத்தின் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும் அதே 25ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, ஜனவரி முதல் வாரத்தில் ‘‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பின்பு கோவிட் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்., அலியாபட் ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கி இருக்கிறார். பேன் இந்தியா படமாக வெளியாக இருப்பதால் இந்தியா முழுவதும் இந்த படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் ‘‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் ‘டான்’ படம் இரண்டும் ஒரே தேதியில் வெளியாகும் என அறிவித்தது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று ‘டான்’ பட வெளியீடு தள்ளி போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த வகையில், கோடை விடுமுறையை ஒட்டி வருகின்ற மே மாதம் 13ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
**ஆதிரா**