இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்கான காப்பகம் கட்டுவதற்கான பணிகளை நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தொடங்கியிருக்கிறார். இதன் முதல் கட்டமாக பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார்.
நடிகர், நடன இயக்குநர், இயக்குநர் ஆகிய அடையாளங்களைத் தாண்டியும் மனிதநேய செயல்களுக்காக அதிகம் அறியப்படுபவர் நடிகர் ராகவா லாரன்ஸ். அவரது லாரன்ஸ் அறக்கட்டளையின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சமூகத்தில் பல்வேறு வகையில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வளர்ச்சிக்கான உதவிகளை செய்துவருகிறார். இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டு 2020ஆம் வருடத்துடன் 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, 15ஆம் ஆண்டினை சிறப்பிக்கும் விதத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக திருநங்கைகளுக்கான காப்பகத்தைக் கட்டுவதற்கான முயற்சிகளை ராகவா லாரன்ஸ் முன்னெடுத்து, லாரன்ஸ் அறக்கட்டளையின் மூலம் காப்பகம் கட்டுவதற்கான நிலத்தை வாங்கியிருப்பதாகவும், அங்கு கட்டிடம் கட்டுவதற்காக அக்ஷய் குமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி செய்திருப்பதாகவும் லாரன்ஸ் தெரிவித்திருக்கிறார்.
திருநங்கைகளுக்கான காப்பகம் குறித்து லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “லாரன்ஸ் அறக்கட்டளையின் 15ஆவது வருடத்தில் ஒரு புதிய நல்ல தொடக்கத்தை முன்னெடுக்கவேண்டும் என நாங்கள் விரும்பினோம். அதனால், திருநங்கைகளுக்கு காப்பகம் கட்டும் முயற்சியில் இறங்கி அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தோம். அக்ஷய் குமார் நடிப்பில் நான் இயக்கும் லக்ஷ்மி பாம் படத்தின் ஷூட்டிங்கின் போது இதுபற்றி அறிந்த அக்ஷய் குமார், நான் கேட்காமலேயே அவராக முன்வந்து ஒன்றரை கோடி ரூபாய் பண உதவி செய்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரையில் உதவி செய்பவர்கள் அனைவரும் கடவுள் தான். எனவே, இப்போது அக்ஷய் குமாரும் எனக்கு ஒரு கடவுளாகிவிட்டார். விரைவில் இந்தியா முழுவதிலும் திருநங்கைகளுக்கான காப்பகங்களைக் கட்டும் பணியை லாரன்ஸ் அறக்கட்டளை அக்ஷய் குமாரின் உதவியுடன் தொடங்கும்” என்று கூறியிருக்கிறார்.
**-சிவா**�,”