‘அவரது ஸ்டைலே தனிதான்’ : ரஜினியை வாழ்த்தும் பிரபலங்கள்!

Published On:

| By Balaji

ரஜினியைப் பற்றி விவரிக்க சில வார்த்தைகள் மட்டுமே மீதமுள்ளன என்று இந்திய சினிமாவின் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லியில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று (25.10.2021) நடைபெற்றது. இதில் ரஜினிக்கு திரைத்துறையில் உயரிய கௌரவமாகக் கருதப்படும் இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இதனைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார். தற்போது தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள ரஜினிக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் முன்பு ரஜினியின் திரையுலக வாழ்க்கையைப் பற்றிய குறும்படம் ஒன்று திரையிடப்பட்டது. இதில் பல்வேறு திரையுலகினரும் ரஜினியைப் பற்றிப் பேசியுள்ளார்கள்.

அந்த வீடியோ பதிவில் திரையுலக பிரபலங்கள் பேசியிருப்பதாவது:

**அமிதாப் பச்சன்**

இந்திய சினிமாவின் இந்த அற்புதத்தைப் பற்றி விவரிக்க ஆங்கில அகராதியில் ஒருசில வார்த்தைகள் மட்டுமே மீதமுள்ளன. மிக எளிமையான ஒரு பின்னணியிலிருந்து உயர்ந்து, இப்படியொரு இடத்தை அவர் பிடித்துச் சாதித்துள்ளார் என்பதே அசாதாரண விஷயம் என்பதையும் தாண்டிய ஒன்று.

**மோகன்லால்**

ரஜினிகாந்தின் தனித்துவமான ஸ்டைல், கவர்ச்சியைப் பற்றிப் பேசாமல், அவரது பாவனைகள், அவருக்கே உண்டான அந்த நடையைப் பற்றிப் பேசாமல் அவரைப் பற்றிப் பேசவே முடியாது. இவை முத்திரையைப் பதித்தன, அவரது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் ஒரு பகுதியாக மாறியுள்ளன.

**ஏ.ஆர்.ரஹ்மான்**

நான் ரஜினிகாந்த்திடமிருந்து கற்ற அற்புதமான விஷயம் என்னவென்றால், அவர் எப்படி உருமாறுகிறார் என்பதைத்தான். கேமராவுக்குப் பின்னால் அவரை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளவே முடியாது. கேமராவுக்கு முன்னால் ஒப்பனை செய்துகொண்டு நிற்கும்போது மொத்தமாக உருமாறி நிற்பார். ஒரு மின்னல் போல.

**இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா**

ரஜினி சார், தனக்கென தனியாக உதவியாள் யாரையும் கேட்க மாட்டார். எல்லோருடனும் கலந்து, உட்கார்ந்து, தேநீர் அருந்தி, உரையாடிக் கொண்டிருப்பார். ஒரு பெஞ்ச் இருக்கும். கண்களில் ஒரு ஈரத்துணியைப் போட்டு மறைத்துக் கொண்டு அங்குதான் தூங்குவார் .

**தயாரிப்பாளர் தாணு**

திரையுலகில் தீர்க்கதரிசியாக, 40 ஆண்டுகளுக்கு மேலாக அவர் முதல்நிலை வகித்து வருகிறார் என்றால் அவருக்கு இந்த விருது சாலப் பொருந்தும் .

**குஷ்பு**

இந்த மனிதர், நிரந்தரமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஏனென்றால் அவர் மற்ற மொழிகளில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தபோதும் அவருக்கென ஒரு இடத்தைப் பிடித்து, பெயர் பெற்றார்.

இந்தியக் குடியரசு துணைத்தலைவரிடம் தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த் இதே விழாவில் அசுரன் படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்ற மருமகன் தனுஷ் உடன் இணைந்து பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க விருதுடன் நின்று கலகலப்பை ஏற்படுத்தினார்.

விருது விழா முடிந்த பின் மரியாதை நிமித்தமாக இந்தியக் குடியரசுத் தலைவரை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ரஜினிகாந்த். இதனை ஜனாதிபதி மாளிகை அதிகாரப்பூர்வமாகப் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளது

**- அம்பலவாணன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share