அரசின் முடிவு தவறாகிவிட்டதா? கோபத்தில் திரைப் பிரபலங்கள்!

entertainment

ஊரடங்கு உத்தரவையும் பொருட்படுத்தாமல் மக்கள் நேற்று (ஏப்ரல் 25) சாலைகளிலும், கடைத் தெருக்களிலும் குழுமியதைக் குறிப்பிட்டுத் திரைப் பிரபலங்களில் சிலர் கடுமையாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் விதமாக கடும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏப்ரல் 24ஆம் தேதி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன்படி, “சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரையான நான்கு நாட்களிலும், சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரையான மூன்று நாட்களிலும் காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. மேலும் “சாலைகளில் மக்கள் நடமாட்டம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும். இந்தத் தடையை யாரேனும் மீறினால் அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த நாட்களில் அந்தப் பகுதிகளில் உள்ள காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் போன்றவையும் இயங்காது என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திடீர் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கப் பொதுமக்கள் நேற்று (ஏப்ரல் 25) காலை முதல் கடைகளில் குவியத் தொடங்கினர். முப்பது நாட்களுக்கும் மேலாக கொரோனா அச்சத்தில் மக்கள் வீடுகளிலேயே இருந்த நிலையில், இயல்புநிலை திரும்பி விட்டதைப் போன்று நேற்று சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பைக், கார் போன்ற வாகனங்களின் போக்குவரத்தும் சாதாரணமாகவே இருந்தது.

பெரும் அதிருப்தியையும், அச்சத்தையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

மக்கள் அலட்சியமாக நடந்துகொண்டது குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “ஏன் இவ்வளவு பீதி சென்னை? நான்கு நாட்கள் முழு ஊரடங்கிற்கு பொருட்களோடு சேர்த்து வைரஸையும் வாங்கிட்டு வந்துருவாங்க போல இருக்கே. 4 நாளும் பிரியாணி சமைக்க போறாங்களோ. பொறுமையாக இருங்கள். இதுவும் கடந்து போகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், அரசு சரியாகத் திட்டமிடாததால்தான் இந்த விபரீதம் நிகழ்ந்ததாகப் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “லாக்டவுனுக்குள் இன்னொரு லாக்டவுனா? இது மோசமான ஐடியா. சற்றும் திட்டமிடாமல் அறிவிக்கப்பட்ட இதனால் நிலைமை இன்னும் மோசமாகும்” எனக் கூறியுள்ளார்.

நடிகர் சாந்தனு நேற்று மக்கள் கூட்டம் கூடியதைக் குறிப்பிட்டு, ‘இதனால் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்தைவிட அதிகமாகும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் இட்டிருக்கும் பதிவில், “நமது நாட்டின் மக்கள்தொகையை மனத்தில் வைத்து அரசு இந்த அறிவிப்பை திட்டமிட்டு வெளியிட்டிருக்கலாம். திடீரென அறிவித்ததால்தான் இவ்வாறு நடந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *