தெலுங்கு நடிகர்கள் சங்கத் தேர்தலில் மொழி வெறி காரணமாக பிரகாஷ்ராஜ் தோல்வியை தழுவினார். அதன் காரணமாக அந்த சங்கம் இரண்டாக பிளவுபடும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இந்தி திரையுலகில் நிறவேற்றுமை காரணமாக திறமையான நடிகர்கள் புறக்கணிக்கப்படுவதாக நடிகர் நவாசுதின் சித்திக் கூறியுள்ளார்.
இந்தி நடிகர்களில் மிகவும் வித்தியாசமான கலைஞராக நவாசுதின் சித்திக் அறியப்படுகிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட படத்தில் நடித்திருக்கிறார். அவர் 2012-ம் ஆண்டில் அறிமுகமானபோது தனது முதல் படமான ‘தலாஷ்’ படத்தில் சிறந்த துணை நடிகருக்கான ஆசியன் பிலிம் அவார்ட்ஸ் விருதைப் பெற்றார்.
அதைத் தொடர்ந்து 2013-ல் வெளியான ‘லஞ்ச் பாக்ஸ்’ படத்திற்காக ஆசிய பசிபிக் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். தனது இயல்பான நடிப்பால் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்ததோடு ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.
கடந்த அக்டோபர் 2 அன்று சுதீர் மிஸ்ரா இயக்கி, நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘சீரியஸ் மென்’ திரைப்படத்திற்காக சர்வதேச எம்மி விருதுக்காக நவாசுதின் சித்திக் பரிந்துரைக்கப்பட்டார்.
இதனையொட்டி நவாசுதின் சித்திக் பேட்டியளித்தார்.
”சீரியஸ் மென்திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார் சுதிர் சாப். அவர் சினிமாவைப் பற்றி அபரிமிதமான அறிவைக் கொண்டிருக்கிறார், அவருடைய சிந்தனை, செயல்முறை மிகவும் யதார்த்தமானது.
இப்படத்தில் என்னுடன் கதாநாயகியாக நடித்துள்ள, இந்திரா திவாரி ஏற்கெனவே பாலிவுட்டில் அறிமுகமாகியும் சரியாக வாய்ப்பு இல்லாமல் தவித்து வருபவர். இப்படத்தில் அவரின் நடிப்பு மிகச் சிறப்பாகப் பேசப்படும். இதற்குப் பிறகு அவருக்கு நிறைய நல்ல வேடங்கள் கிடைக்கும். கதாநாயகியாகவே இனி நடிப்பார். அதுவே அவருக்கு உண்மையான வெற்றியாக அமையும்.
பாலிவுட்டில் நட்புறவு இல்லை. இனவெறிதான் இங்கு அதிகமாக இருக்கிறது. ஒரு நடிகை கறுப்பாக இருந்தால் ஒதுக்கிவிடுகிறார்கள். உங்களுக்குப் படம் நன்றாக வரவேண்டுமெனில் சிறப்பாக நடிப்பவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் இயக்குநர் அதைச் செய்துள்ளார்.
நான் தோலின் நிறம் பற்றிக் கூடப் பேசவில்லை. சிறந்த திரைப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவுசெய்ய வேண்டிய தேவை நமக்கு உள்ளது. நான் பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டேன். ஏனென்றால் நான் உயரம் குறைவாக இருக்கிறேனாம்.
அதுமட்டுமின்றி பாலிவுட்டில் உள்ள இனவெறியை எதிர்த்து நான் பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். அதைப் பற்றி புகார் அளிக்க நான் விரும்பவில்லை.
எனது நடிப்பால் இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். ஆனால், இதில் கொடுமை என்னவென்றால் பல பெரிய நடிகர்களும் இந்த மாதிரியான கண்ணோட்டத்தில்
பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
**-அம்பலவாணன்**
�,