ஃபேஸ்புக் செயலியில் பிழை இருப்பதாக சுட்டிக்காட்டிய தமிழக மாணவருக்கு, அந்த நிறுவனம் 77 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 500 கோடி பேரால் ப்ளே ஸ்டோரில் இருந்து ஃபேஸ்புக் செயலி இதுவரை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில், மக்கள் தினமும் பயன்படுத்தி வரும் இந்த முகநூல் செயலியின் பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடுகள் இருப்பதாக சில புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
தங்கள் செயலியின் தரத்தை உயர்த்த அத்தகைய குறைகளைக் கண்டறிந்து ஃபேஸ்புக் நிறுவனம் சரி செய்து வருகிறது. அந்த வகையில் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவரான கிஷோர், ஃபேஸ்புக்கின் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பகுதியில் பிழை இருப்பதைக் கண்டறிந்தார்.
ஃபேஸ்புக்கில் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற ஒரு ஆப்ஷன் இருக்கிறது. ஃபேஸ்புக் மீடியா துறையைத் தொடர்பு கொண்டு தேவைப்படுபவர்கள் இதை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். அவ்வாறு ஆக்டிவேட் செய்யப்பட்டால் ஃபேஸ்புக்கில் நாம் பதிவேற்றம் வீடியோ மற்றும் ஆடியோக்களுக்கான உரிமம் நமக்குக் கிடைக்கும்.
இது தனியார் மீடியா நிறுவனங்கள் தங்களுக்கான அதிகாரப்பூர்வ பக்கத்தை உருவாக்கி, தங்கள் வீடியோக்கள் மற்றும் செய்திகளைப் பாதுகாக்க உதவுவதாக இருந்தது.
ஆனால் ரைட்ஸ் மேனேஜர் ஆப்ஷன் இருந்தும் கூட ஒரு தனியார் நிறுவனத்தின் தரவுகளை தனிநபர் எளிதாகப் பார்த்து பயன்படுத்தவும் அதை சட்டத்திற்கு புறம்பாக உபயோகிக்கவும் முடியும் நிலை இருந்து வந்தது. இந்தப் பிழையைக் கண்டுபிடித்து, அதை நீக்க வேண்டும் என்று சென்னையில் கல்லூரி ஒன்றில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர் கிஷோர் பேஸ்புக் நிறுவனத்திற்கு தகவல் அளித்தார்.
அதனைக் கருத்தில் எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம் பிழையை சரி செய்ததுடன், மாணவரைப் பாராட்டி ஆயிரம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 77 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கியுள்ளது. மாணவர் கிஷோர் ஏற்கனவே கூகுள் மற்றும் மைக்ரோ சாஃப்ட் தளங்களில் உள்ள பிழைகளையும் கண்டுபிடித்துக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”