பாலிவுட் நடிகை சஞ்சனா சங்கி விரைவில் வெளியாகவிருக்கும் தில் பெச்சாரா படத்தில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடித்துள்ளார். நிதேஷ் திவாரியின் ‘சிச்சோர்’ படத்தில் கடைசியாகத் தோன்றிய சுஷாந்த் சிங் ராஜ்புட், ஜூன் 14 அன்று தனது மும்பை பாந்த்ரா இல்லத்தில் இறந்து கிடந்தார். அவரது அகால மறைவு அவரது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சுஷாந்த் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரண வழக்கை விசாரிக்க மும்பை காவல்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். தற்போது வரை சுஷாந்த் சிங் ராஜ்புட் உடன் நெருங்கிய தொடர்பு கொண்ட 28 பேரின் அறிக்கையை மும்பை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
சுஷாந்த் சிங்கின் கடைசி படத்தில், சஞ்சனா நாயகியாக நடித்துள்ளார். முகேஷ் சப்ரா இயக்கிய இப்படத்தில் சுஷாந்தின் இணை நடிகர் என்பதால் நேற்று(ஜூன் 30) நடிகை சஞ்சனா சங்கி பாந்த்ரா காவல் நிலையத்தில் சுஷாந்த் மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்டார். சுமார் 7 மணி நேரம் இந்த விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தன்னைச் சுற்றி நடக்கும் இந்த அசாதாரண சூழலால் மிகவும் தொந்தரவு அடைந்துள்ளார் சஞ்சனா என்பது விசாரனைக்குப் பிறகான அவரது சமூக வலைதளப் பதிவில் தெரிகிறது.
இன்று சஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் ‘ஸ்டோரியில்’ மும்பை குறித்து சில வரிகளை எழுதியுள்ளார். அதில், குடா ஹபீஸ் மும்பை. நான் மீண்டும் டெல்லிக்குச் செல்கிறேன். உங்கள் சாலைகள் சற்று வித்தியாசமாகத் தெரிகின்றன. அது வெறிச்சோடியிருந்தது. ஒருவேளை என் இதயத்தில் உள்ள வருத்தம் என் முடிவை மாற்றிக்கொண்டிருக்கலாம். விரைவில் சந்திக்கலாம் அல்லது சந்திக்காமலே இருக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.
சுஷாந்த் மறைந்த போதே, “காலம் காயங்களை ஆற்றும் என்பதெல்லாம் பொய்” எனக் கூறி ஒரு நீண்ட பதிவை சஞ்சனா வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தனது அறிமுகப் படத்திலேயே உடன் நடித்த நாயகனின் மர்ம மறைவு, அதன் பின்னர் விசாரணை, விரைவில் வரவிருக்கும் படம் என அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் நிச்சயம் இவரை பாதித்திருக்கும் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், சஞ்சனா இனி படத்தில் நடிப்பாரா எனவும் கேள்விகள் எழுந்து வருகின்றன.
சுஷாந்த், சஞ்சனா நடித்த தில் பெச்சாரா வரும் ஜூலை 24 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”