ரஜினி முதல் விஜய்சேதுபதி வரை : அதிக ரிலீஸ் கொடுத்த ஹீரோக்களின் அலசல் !

Published On:

| By Balaji

சினிமாவின் ஆரம்பக் காலக்கட்டத்தில் நடிகர்களின் எண்ணிக்கை குறைவு. அதனால், ஒரு வருடத்துக்கு எக்கச்சக்கப் படங்களில் நடித்தார்கள் நடிகர்கள். இது பாகவதர், சிவாஜி, ரஜினி காலம் வந்த பிறகும் கூட தொடர்ந்தது. ஏனெனில் அந்தக் காலக்கட்டத்தில் ஒரு வாரத்தில் எடுக்கும் படம், 20 நாட்களுக்குள் எடுக்கும் படம், 50 நாட்களுக்குள் முடியும் படம் என தயாரிப்பு காலம் குறைவாக இருந்தது. அதனால் நடிகர்களுக்கும் நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்பம் பெரிதாக வளர்ச்சி காணாததால் மிகப்பெரிய பொழுதுபோக்காக திரையரங்குகளும் திரைப்படங்களும் மட்டுமே இருந்தது. அப்படி, ஒரே வருடத்தில் அதிக படங்களை ரிலீஸ் செய்த ஹீரோக்கள் யார்? நடித்த படங்கள் என்னென்ன என்ற அலசலே இந்த தொகுப்பு. இதில், எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தை எடுத்துக் கொண்டால் லிஸ்ட் பெரிதாக போகும் என்பதால், ரஜினியிலிருந்து துவங்கலாம்.

**ரஜினி**

ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்த `பைரவி’ படத்துக்குப் பிறகான காலத்திலிருந்து ஆரம்பிக்கலாம். அதாவது 1978க்குப் பிறகான அவரின் படங்கள். குறிப்பாக இந்த வருடத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட படங்கள் அவரின் நடிப்பில் வெளியானது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படங்கள் என்றால் பைரவி, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, முள்ளும் மலரும், தப்புத் தாளங்கள், அவள் அப்படித்தான், ப்ரியா உள்ளிட்ட பல படங்கள் இதில் அடக்கம். அவருடைய கரியரில் அதிக படங்கள் வெளியானதும் அந்த வருடத்தில் தான். 79-க்கு பிறகு, அதாவது ரஜினி – கமல் தனித்தனியாக தமிழில் நடிக்க முடிவெடுத்த `நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்குப் பிறகும் ரஜினி இந்த ட்ராக் ரெக்கார்டினைத் தொடர்ந்தார். 1980ல் பில்லா, அன்புக்கு நான் அடிமை, காளி, ஜானி, பொல்லாதவன், முரட்டுக்காளை உட்பட 10 படங்கள் ரிலீஸ் ஆனது. அதற்குப் பிறகான பட எண்ணிக்கை கணிசமாக குறைய ஆரம்பித்தது. 81ல் ஆறு படங்கள், 82ல் எட்டு படங்கள், 83ல் ஒன்பது படங்கள், 84ல் ஒன்பது படங்கள், 85ல் பத்து படங்கள் இப்படியே இந்த லிஸ்ட் நீண்டது. சரியாக 90-களுக்குப் பிறகு தான், இது மிகப்பெரிய அளவில் குறையத் துவங்கியது. 1997-க்குப் பிறகு வருஷத்துக்கு ஒரு படம், ரெண்டு வருஷத்துக்கு, மூணு வருஷத்துக்கு ஒரு படம் தான் நடித்தார் ரஜினி.

**கமல்**

சோலோ ஹீரோவாக கமல்ஹாசன் 1978ல் நடிக்க துவங்கினார். அந்த வருடம் நிழல்கள் நிஜமாகிறது, இளமை ஊஞ்சலாடுகிறது, சட்டம் என் கையில், சிகப்பு ரோஜாக்கள், அவள் அப்படித்தான், தப்புத் தாளங்கள் உட்பட அவரின் ஏழு படங்கள் தமிழில் மட்டும் வெளியானது. 1979-ல் ஒன்பது படங்கள், 1980ல் உல்லாசப் பறவைகள், குரு, வறுமையின் நிறம் சிவப்பு என மூன்று படங்கள், இந்த மாதிரி கமலின் க்ராஃப் ரொம்பவே வித்தியாசமாக மாறிக்கொண்டே இருந்தது. 1981ல் எட்டு படங்கள், 1983ல் 5 படங்கள், இது மாதிரி நிலையே இல்லாமல் அவர் மற்ற மொழியில் நடிக்கும் படங்களைப் பொறுத்து எண்ணிக்கை மாறியது. அதன்பிறகு, வருடத்துக்கு ஐந்து அல்லது ஆறு தமிழ் படங்கள் என்பதை நிலையாகத் தொடர ஆரம்பித்தார். இதில், கமர்ஷியல் படம் 3 நடித்தார் என்றால், அவரின் ஸ்டைலில் வித்தியாசமான முயற்சியாக இரண்டு படங்கள் வெளியாகும். சிங்காரவேலன் மாதிரி ஒரு ஜாலியான படம் நடித்தால், அதே வருடத்தில் தேவர் மகன் மாதிரியான சீரியஸ் படமும் வரும். 2000ல் அவர் நடித்த ‘ஹேராம்’-க்குப் பிறகு கமலின் திரைப்பயணம் முற்றிலும் வேற ஒன்றாக மாறியது. ஒரு வருடத்தில் ரெண்டு படம் கொடுத்தவர், அந்த ஒரு படம் பண்றதுக்கே ரெண்டு வருடம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு, விருமாண்டி மாதிரி ஒரு சீரியஸ் படம், வசூல் ராஜா மாதிரி ஒரு ஜாலியான படம் என வெரைட்டி காட்டினார். ஆக, கமலுடைய சினிமா வாழ்க்கையில் அதிக படங்கள் ரிலீஸ் ஆன வருஷம் 1978, படங்களுடைய எண்ணிக்கை 20.

**மோகன்**

வெள்ளிவிழா நாயகன் என சினிமாவில் பெயரெடுத்த மோகன், இந்த லிஸ்டில் மிக முக்கியமான நபர். அவர் நடிக்கும் படங்களெல்லாம் வெள்ளிவிழா கொண்டாடுவது போல, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் படம் ரிலீஸ் ஆன காலங்களும் உண்டு என சினிமா வட்டாரத்தில் விளையாட்டாக ஒரு பேச்சு உண்டு. துரை இயக்கத்தில் 1981-ல் வெளியான `கிளிஞ்சல்கள்’ மூலமாக சோலோ லீடாக நடிக்க ஆரம்பித்தவருக்கு ஏறுமுகம் தான். 82ல் அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 12. பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, அர்ச்சனைப் பூக்கள், மாதிரி முக்கியமான படங்கள் இதில் அடக்கம். மோகனுடைய சினிமா கிராஃபில் அவருக்கு அதிகப் படங்கள் வெளியான வருஷம் 1984. படங்களின் எண்ணிக்கை 21. அதன்பிறகு, 10-க்கும் மேல் அவருடைய படங்கள் வருடா வருடம் வெளியாகிவிடும். 90களின் துவக்கம் வரைக்கும் செமயா இருந்த அவர் மேல், ரசிகர்களுக்கு ஆர்வம் குறைய, படங்களின் எண்ணிக்கையும் குறைந்து, அப்படியே இல்லாமல் போய்விட்டது.

**விஜய்காந்த்**

ரஜினி – கமல் – மோகன் என அதிக படங்கள் ரிலீஸ் செய்யும் நடிர்கள் வரிசையில் இன்னொரு முக்கிய நடிகர் விஜய்காந்த். அதிக புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது, எல்லாத்தரப்பு ஆடியன்ஸுக்கும் போய் சேரும் படங்களை நடித்தது என இவரின் ஃபார்முலா கொஞ்சம் யுனிக். 80-களின் துவக்கத்தில் ஆரம்பித்த விஜயகாந்த் சினிமா பயணத்தில் முக்கால்வாசி படங்கள் ஹிட்தான். அதிக பட்சமாக அவரின் படங்களின் ரிலீஸ் வருஷத்தை கணக்கில் எடுத்தால், 1984ஆம் ஆண்டு வெளியான படங்களின் மொத்த எண்ணிக்கை 18. வைதேகி காத்திருந்தாள் உட்பட பல படங்கள் அந்த வருடம் தான் வெளியானது.

**சத்யராஜ்**

வில்லனாகத் திரைப்பயணத்தைத் துவங்கி, குணச்சித்திர வேடங்களில் நடித்து, ஹீரோவாக பல படங்கள் ஹிட் கொடுத்து மீண்டும் குணச்சித்திர ரோல் என ஒரு வட்டம் போட்டு நடித்துவருகிறார் சத்யராஜ். 1987ல் பூவிழி வாசலிலே, சின்னத்தம்பி பெரிய தம்பி, மக்கள் என் பக்கம், கடமை கண்ணியம் கட்டுப்பாடு, வேதம் புதிது உட்பட ஒன்பது படங்கள் இவருக்கு வெளியானது. இவருக்கு அதிகப் படங்கள் வெளியான வருடமென்றால், 1985ஆம் ஆண்டு தான். அந்த ஆண்டு மட்டும் 28 படங்கள் வெளியானது.

**சரத்குமார்**

இவரைத் தொடர்ந்து, வருடத்திற்கு பத்துக்கு மேல் படம் ரிலீஸ் செய்த நடிகர் சரத்குமார். அதன்பிறகு வந்த நடிகர்களெல்லாம் ஒன் டைம் வொண்டர் மாதிரி வருவதும் போவதுமாக பெரியளவில் நிலைத்து நிற்கவில்லை. இதற்கு அடுத்த தலைமுறை என்று பார்த்தால், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் மாதிரியான நடிகர்களை குறிப்பிட்டுக் கூறலாம். இவர்களுக்கெல்லாம் வருடத்திற்கு 10 படங்கள் ரிலீஸென்பதெல்லாம் நடக்கவில்லை என்பதே உண்மை. அதிகபட்சமாக ஒவ்வொரு நடிகர்களும் உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் ஐந்து முதல் ஆறு படங்கள் வரை ஆண்டுக்கு கொடுத்திருப்பார்கள் அவ்வளவு தான். ஏனெனில், புதிது புதிதாக நடிகர்கள், படமெடுக்கும் நாட்கள், படத்தின் பட்ஜெட், தொழில் நுட்பம் என அனைத்தும் மாறுவதால், ரஜினி -கமல் காலத்து விஷயங்கள் பெரிதாக நடக்கவில்லை.

**விஜய், அஜித்**

விஜய் எடுத்துக் கொண்டால், அவர் நடித்து அதிக படங்கள் ரிலீஸ் ஆன வருடம் 1996 மற்றும் 1997. இதில், 96ல் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, பூவே உனக்காக, வசந்த வாசல், மாண்புமிகு மாணவன், செல்வா என ஐந்து படங்களும், 97ல் காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை என ஐந்து படங்களுமே வெளியானது. அதுமாதிரி, அஜித்துக்கு 1999ஆம் ஆண்டு மட்டும் தொடரும், உன்னைத் தேடி, வாலி ஆனந்தப் பூங்காற்றே, அமர்க்களம், நீ வருவாய் என’ என ஆறு படங்கள் வெளியானது.

**சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதிபதி**

சூர்யாவுக்கு 2002 ஆம் ஆண்டில் உன்னை நினைத்து, ஸ்ரீ, மௌனம் பேசியதே படங்களும் 2005ல் மாயாவி, கஜினி, ஆறு என வருடத்துக்கு மூன்று படங்கள் வெளியானதே அதிகம்.

அதுமாதிரி விக்ரமுக்கு 2003-ல் தூள், காதல் சடுகுடு, சாமி, பிதாமகன் என நான்கு படங்கள் வெளியானது. இந்த வரிசையில் தனுஷையும் சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில், 2011ல் அதிகபட்சமாக ஆடுகளம், சீடன், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன’ என ஐந்து படங்கள் ரிலீஸானது.

இந்த வரிசையில், லேட்டஸ்ட் நடிகரென்றால் விஜய்சேதுபதி. வெள்ளிக்கிழமை நாயகனாக வலம்வந்துகொண்டிருக்கிறார். விஜய்சேதுபதிக்கு அதிகமான ரிலீஸான வருடமென்றால் 2016. சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி ,தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என ஆறு படங்கள் வெளியாகியிருக்கிறது.

**- ஆதினி**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share