போஸ் வெங்கட் இயக்கத்தில் ‘உறியடி’ விஜய் குமார்

Published On:

| By Balaji

‘கன்னிமாடம்’ திரைப்படத்தை இயக்கிய போஸ் வெங்கட் இயக்கும் புதிய திரைப்படத்தில் ‘உறியடி’ படத்தின் இயக்குநர் விஜய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார்.

மேடை நாடகங்கள், சின்னத்திரை சீரியல்கள், வெள்ளித்திரையில் குணச்சித்திர வேடங்கள் என ஆரம்பித்து இப்போது வெள்ளித்திரை இயக்குநராக வளர்ந்திருப்பவர் போஸ் வெங்கட். அவர் இயக்கிய கன்னிமாடம் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. விமர்சன ரீதியாக பலரது பாராட்டுகளையும் பெற்ற கன்னிமாடம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்கான பணிகளில் போஸ் வெங்கட் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

தண்ணீரின் தேவையை உணர்த்தும் விதத்தில் நீருக்கும்-ஊருக்கும் உள்ள தொடர்புகளை மையப்படுத்தி சமுதாய கண்ணோட்டத்துடன் கூடிய நகைச்சுவை படைப்பாக இந்தத் திரைப்படம் உருவாகவுள்ளது. ‘மூவ் ஆன் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் ‘உறியடி’ விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். அவரது தந்தையாக முக்கிய வேடத்தில் பசுபதி நடிக்கவுள்ளார்.

போஸ் வெங்கட் இயக்கிய ‘கன்னிமாடம்’ திரைப்படமும், விஜய் குமார் இயக்கி நடித்திருந்த ‘உறியடி’ திரைப்படமும் சமூகம் சார்ந்த கருத்துக்களுடன் கவனம் ஈர்த்தன. இந்த நிலையில் இருவரும் ஒரே படத்தில் இணையப் போகிறார்கள் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்தப்படத்தின் முதற்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share