விவசாயப் படத்துக்கு கிடைத்த விலை இவ்வளவு தானா ?

Published On:

| By Balaji

ஜெயம்ரவி நடிப்பில் லக்‌ஷ்மண் இயக்கத்தில் பொங்கல் தின சிறப்பாக இன்று வெளியாகியிருக்கும் படம் பூமி.

ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியவர் லக்‌ஷ்மண். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி மீண்டும் நடித்திருக்கும் படம் பூமி. ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகியிருக்கிறது. நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை இமான். விவசாயம் சார்ந்த திரைப்படமாக இது உருவாகியிருக்கிறது.

கடந்த வருடம் மே 1ஆம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம், கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போய் தற்பொழுது வெளியாகியிருக்கிறது. அதுவும், திரையரங்கில் வெளியாக முடியாமல், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. அப்படி, டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இன்று பூமி வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்தை நேரடியாக வெளியிட படக்குழுவினர் 40 கோடி கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இணைய நிறுவனம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.. இறுதியாக, 30 கோடி ரூபாய்க்கு வெளியீட்டு உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றிருக்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மொழியில் வெளியிடவும் சேர்த்தே 30 கோடி தான் பேசிமுடித்திருக்கிறார்கள்.

ஓடிடி ரிலீஸ், தொலைக்காட்சி உரிமை அனைத்தும் சேர்த்து பார்த்தால் இந்த தொகை மிகவும் குறைவு என்பதே உண்மை. இந்த தொகை முடிவாகவே இத்தனை நாட்கள் ஆனதால், பூமி ரிலீஸ் தள்ளிப் போயிருக்கிறது. இருப்பினும், எதிர்பார்த்ததை விட குறைவான தொகைக்கே விலைபோயிருப்பதும் கவனிக்கத்தக்கது. மேலும், விவசாயம் தான் இங்கு மோசமான சூழலில் இருக்கிறதென்றுப் பார்த்தால், விவசாயம் சார்ந்த படத்துக்கும் மதிப்பு அவ்வளவு தான் போல.

**-ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share