சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் சென்னை இசிஆரில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். முன்னதாக, அவருடைய வீடு சாலிகிராமத்தில் இருந்தது. தற்போது அந்த வீட்டின் ஒரு பகுதியில் விஜய் ஆண்டனி வாடகைக்குக் குடியிருக்கிறார். அதன் மற்றொரு பகுதியில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அலுவலகம் உள்ளது.
இந்நிலையில், நேற்று(ஜூலை 4) நள்ளிரவு காவல் துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு ஒருவர் பேசியுள்ளார். அப்போது அந்த நபர் சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.
இதையடுத்து செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஸ்வர் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியதில் மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகன் இதுபோல் செய்ததாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் பெற்றோரை எச்சரித்துள்ளனர்.
கடந்த மாதம் ஜூன் 18ஆம் தேதி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கும் இதே போல வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் கடலூரை சேர்ந்த 15 வயது சிறுவன் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரியவந்தது.
**-முகேஷ் சுப்ரமணியம்**
�,