பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தபோது, அவர்களுக்கு மிகப்பெரும் பலமாக இருந்தது பாலிவுட் திரையுலகம். மாநில ஆட்சியின் காரணமாக மற்ற திரையுலகங்கள் அமைதி காத்தபோது பாலிவுட்டுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் என வலிமையான ஆதரவு அந்தக் கட்சிக்குக் கிடைத்தது. பா.ஜ.க. ஆனால், இப்போது அதே மத்திய அரசுக்கு எதிராக பாலிவுட் ஒன்று திரண்டுவிட்டதோ என்ற கேள்வி எழும் அளவுக்கு ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது, அதே மத்திய அரசின் மீது பற்று கொண்ட ஊடகங்கள் என்று சொன்னால் மிகையில்லை.
அக்டோபர் 12ஆம் தேதி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு சிவில் வழக்கு பதிவானது. அந்த வழக்கு பொற்றுப்பற்ற, இழிவுபடுத்தக்கூடிய, களங்கம் விளைவிக்கக்கூடிய அளவுக்கு செய்தி வெளியிட்டதற்காக நிவாரணம் வழங்கவேண்டும் என்பதை கோரிக்கையாகக் கொண்டிருந்தது. தேசிய ஊடகம், இந்திய மக்களின் விடிவெள்ளியாக இருக்கிறோம் என்றும் புகழ்ந்துகொள்ளும் ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய இரு ஊடகங்களுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை மேலும் ஆச்சர்யப்படுத்தக்கூடிய வகையில் மாற்றியது, இதில் தங்களை இணைத்துக்கொண்டு கையெழுத்திட்டிருந்த நபர்கள் தான். வழக்கமாக சினிமாவில் மட்டுமே பார்க்கக்கூடியதொரு கூட்டணி அது.
ஷாருக் கான், சல்மான் கான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ஆமிர் கான், அனுஷ்கா ஷர்மா ஆகிய நடிகர்-நடிகைகளும்; ரோஹித் ஷெட்டி, விது வினோத் சோப்ரா, ஜோயா அக்தர் உள்ளிட்ட இயக்குநர்களும், யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ், கரன் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் உள்ளிட்ட பல தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து இந்தப்புகாரைக் கொடுத்திருக்கின்றன. முக்கியமான சிலர் இந்த வழக்கில் இணையவில்லை என்றாலும், இந்த வழக்கினால் ஏற்படும் ரியாக்ஷனில் அவர்களும் பயன்பெறுவார்கள் அல்லது பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி.
**அப்படி என்ன புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது?**
பாலிவுட் மொத்தமாக அணிதிரண்டு இரண்டு மீடியா நிறுவனங்களின் மீது புகார் கொடுப்பது சாதாரணமல்ல. முழு துறையையும் தங்களுக்கெதிராக திருப்பிக்கொள்ளும் வகையில் அந்த நிறுவனங்கள் செயல்பட்டது, நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் மற்றும் அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளினால் தான்.
சுஷாந்த் சிங் இறந்ததற்குக் காரணம் தற்கொலையாக ஏன் இருக்கக்கூடாது என்ற கோணத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு, அது கொலையாக இருப்பதற்கான காரணங்களை தேடித்தேடி ஓடின மீடியாக்கள். பாலிவுட்டில் இடம்பெற்றிருக்கும் மாஃபியா கும்பலின் காரணமாகவே சுஷாந்த் சிங் இறந்தார் என்றனர். குறிப்பிட்ட சிலர் பாலிவுட்டை கைப்பிடியில் வைத்துக்கொண்டு, யாருக்கு எப்போது வாய்ப்பு கொடுப்பது என்ற முடிவினை எடுத்தனர் என்று குற்றம் சாட்டினர். போதைப் பொருளின் புகலிடமாக பாலிவுட் இருக்கிறது என்று கூறினர். இதற்கெல்லாம் ஆதாரம் எங்கே என்று கேட்க யாரும் இல்லை. மீடியா கொடுத்த அழுத்தத்தினாலும், அதனால் மக்களிடையே ஏற்பட்ட கோபத்தின் காரணத்தாலும், ஒவ்வொரு நாள் மீடியாக்களில் வெளியாகும் தகவல்களையும் விசாரித்து உண்மையைக் கண்டுபிடிப்பதிலேயே காவல் துறை ஓடிக்கொண்டிருந்தது. “போதைப் பொருள் விவகாரத்தில் முக்கிய ஆதாரம் போலீஸிடம் கிடைத்திருக்கிறது. முக்கிய நடிகர்கள், நடிகைகள் சிக்குகிறார்கள்” என்றெல்லாம் ஒவ்வொரு செய்தியாக வெளியிட்டு, சாதாரண விசாரணைக்குச் சென்றவர்களையும் போதைப் பொருள் கும்பலின் தலைவனாகவும், தலைவியாகவும் மாற்றினார்கள். ஒரு கட்டத்துக்குப் பிறகு, சுஷாந்த் இறந்ததன் காரணம் தற்கொலை தான் என்று சிபிஐ விசாரித்து முடித்தபிறகு அடுத்த செய்தியை நோக்கித் திரும்பிவிட்டன மீடியாக்கள். ஆனால், இதனால் பாலிவுட் இழந்தது என்ன? என்ற கேள்வி முக்கியமானதாக இருந்தது. அப்படி இழந்தது என்ன என்பதையும், இது தங்கள் வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்னவென்பதையும் உணர்த்தவே பாலிவுட் இந்த வழக்கின் மூலம் வெளிப்படுத்த நினைத்திருக்கிறது.
“பாலிவுட்டில் இதுவரை சில தவறுகள் நடைபெற்றிருக்கலாம். சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அதற்காக மொத்த பாலிவுட்டையும் குற்றவாளி என்று முத்திரை குத்துவது மிகப்பெரிய தவறு. அதனைத்தான் இந்த இரு மீடியாக்களும் செய்தன. ‘அரேபியாவின் மொத்த வாசனை திரவியங்களையும் கொண்டுவந்தால் கூட, பாலிவுட்டின் அழுக்கையும், நாற்றத்தையும் துடைக்க முடியாது”, ‘நாட்டிலேயே மிக அசிங்கமான துறை பாலிவுட் தான்’ என்பது போன்ற வார்த்தைகளினால் அதில் பணியாற்றும் அனைவரையும் இவர்கள் அசிங்கப்படுத்தியிருக்கின்றனர்” என்று இந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுஷாந்தின் மரணத்துக்கு நீதி கேட்க வேண்டியது எத்தனை அவசியமோ, அதே அளவுக்கு ஒரு நிரபராதிக்கு தண்டனை கிடைத்துவிடாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியமாகிறது. ஆனால், சுஷாந்த் வழக்கில் விசாரிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கொலையாளி என முத்திரை குத்தியதையும், விசாரணைக்குச் சென்றவர்களின் பூர்வாங்கத்தை நோண்டி எடுத்தது என இந்த மீடியாக்கள் மீது கடும் புகார்களை கொடுத்திருக்கின்றனர்.
**அதனால் ஏற்பட்ட நஷ்டம் என்ன?**
மீண்டு வராத இந்தியாவைப் போலவே, கோரோனாவிலிருந்து பாலிவுட்டும் இன்னும் மீண்டு வரவில்லை. அக்டோபர் 15ஆம் தேதியிலிருந்து தான், கடந்த 6 மாதங்களாகக் கிடப்பிலிருந்த படங்களையெல்லாம் தியேட்டருக்குக் கொண்டுவரப்போகிறது பாலிவுட். அப்படிக் கொண்டுவந்தாலும், கிடைக்கவிருக்கும் லாபம் என்பது முன்பு கிடைத்ததில் 50% தான். காரணம், 50% தியேட்டர் சீட்டுகள் தான் பயன்பாட்டில் இருக்கப்போகின்றன. இதற்கு முன்பு முதல் நாளில் படம் பார்க்கும் ரசிகர்கள் அளவை, இப்போது தியேட்டர் திறந்ததும் பார்க்கக்கூடிய ரசிகர்களுடன் கணக்கிட்டால் கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகும் என்கின்றனர். முந்தய முதல் இரண்டு நாள் காட்சிகளைப் பார்க்கும் ரசிகர்களிடம் படத்தைக் கொண்டு சேர்ப்பதற்கே ஒரு வாரம் ஆகிவிடும். அதற்குள் அடுத்த படம் ரிலீஸாகும். எனவே, நஷ்டம் என்று தெரிந்தும் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்தாகவேண்டிய கட்டாயத்துக்கு திரைத்துறை ஆளாகியிருக்கிறது. அப்படியும் படம் நன்றாக இருந்து, அதிக நாட்கள் தியேட்டரில் இருந்தாலும், ஸ்ட்ரீமிங் இணையதளங்களிலும் அவை வெளியாகிவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. எல்லா பக்கத்திலும் நஷ்டத்தை சந்தித்தாலும், திரைத்துறை இயங்குவதற்கான பணம் தேவை என்பதால் படங்களை ரிலீஸ் செய்ய தயாராகிக்கொண்டிருக்கிறது பாலிவுட். இந்நிலையில், பாலிவுட் மீது மீடியா நிறுவனங்களினால் தெளிக்கப்பட்ட களங்கத்தை துடைத்தாகவேண்டிய அவசியம் இருக்கிறது. காரணம், ஒரு நடிகரின் பெயர் ‘எக்ஸ்’ என்று வைத்துக்கொள்வோம். அவரை போதைப் பொருள் ஆசாமியாக மீடியா உருவகப்படுத்தும்போது, அந்த எக்ஸ் நடிகர் திரைப்படத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக வசனம் பேசினால், ‘நீயெல்லாம் பேச வந்துட்டியா” என ரசிகர்களின் மனதில் தானாகத் தோன்றும். இப்படி மொத்த பாலிவுட்டின் நன்மதிப்பையும், சுஷாந்த் சிங் இறப்புக்குப் பின் நடைபெற்ற விவாதங்கள் அழித்தொழித்துவிட்டன. “அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மையென நிரூபிக்கவேண்டும் அல்லது மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது எங்களைப்பற்றி இனி பேசக்கூடாது” என்பதே பாலிவுட்டின் கோரிக்கையாக அந்தப் புகாரில் இருக்கிறது.
**இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா?**
ஒரு மீடியா நிறுவனத்தின் குற்றச்சாட்டு பொய் என நிரூபிக்கப்படும் பட்சத்தில் மன்னிப்பு கேட்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது. நீதிமன்றம் வரையில் செல்லவேண்டாம்; அதற்கான அமைப்புகளே இதனை செய்யலாம். ஆனால், ரிபப்ளிக் டிவி அப்படிப்பட்ட மன்னிப்பு கேட்கும் படலத்திலிருந்து இதற்கு முன்பு எப்படி எஸ்கேப் ஆகியிருக்கிறது என்பதை [அர்னாபை கேள்வி கேட்க முடியுமா?](https://minnambalam.com/politics/2020/10/09/16/arnab-goswamis-republic-tv-in-trouble-after-mumbai-police-exposes) என்ற செய்தியில் குறிப்பிட்டிருக்கிறோம்.
ஒரு பக்கம் TRP ரேட்டிங்கில் ஏமாற்றம் செய்ததாக ரிபப்ளிக் டிவி மீது மும்பை போலீஸ் நடத்திவரும் விசாரணை ரிபப்ளிக் டிவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தாலும், அதில் ரிபப்ளிக் டிவி-யை நேரடியாக தொடர்புபடுத்தக்கூடிய யாராவது சிக்கும் வரை அந்த வழக்கு வலுவற்றதாகவே இருக்கும். ஆனாலும், தைரியமாக பாலிவுட் வெளிவந்திருப்பதற்குக் காரணம் பா.ஜ.க முன்னெடுத்த டிஜிட்டல் போர் முறையாகவே இருக்கவேண்டும்.
சுஷாந்த் சிங் மரணத்தை வைத்து மகாராஷ்டிர அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த, கிட்டத்தட்ட 80,000 போலி ட்விட்டர் கணக்குகள் மூலம் பா.ஜ.க முயன்றதாக மும்பை போலீஸ் கமிஷனர் குற்றம் சாட்டியிருக்கிறார். இதில் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருப்பதால், இருபத்தைந்து வருட கூட்டணியை உடைத்து காங்கிரஸுடன் கைகோர்த்த சிவசேனாவை பழிவாங்க பா.ஜ.க எடுத்த முடிவினால் நாம் பாதிக்கப்பட்டோமே என்ற உணர்வினாலேயே பாலிவுட் இப்போது போர்க்களம் கண்டிருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கத்துக்கு மிக நெருக்கமானதாகக் கருதப்படும் இரண்டு மீடியா நிறுவனங்களை எதிர்த்தால், அதன் பின்விளைவுகள் என்னவென்பதை கணிக்காமல் பல்லாயிரம் கோடி ரூபாய் வியாபாரம் செய்யும் ஒரு துறை களமிறங்குகிறது என்றால் நம்பமுடியுமா?
இதில் சுவாரசியம் என்னவென்றால், அதனையும் பாலிவுட் திரையுலகம் தங்களது புகாரில் குறிப்பிட்டிருப்பது தான். “பல ஆண்டுகளாகவே பாலிவுட் திரையுலகம் பணம் உருவாக்கும் முக்கியமான இடமாக இருக்கிறது. பொதுமக்களின் பணத்தை கருவூலம் போல பாதுகாத்து, அதனை பல்வேறு வரிகளின் மூலம் அரசாங்கத்துக்குக் கொடுத்திருக்கிறது. அதேசமயம், வெளிநாட்டில் படங்களை ரிலீஸ் செய்து அயல்நாட்டு பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவரும் கருவியாகவும் இருந்திருக்கிறது. அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாகவும், பல்வேறு துறைகளுக்கு வேலையைக் கொடுப்பதாகவும் இருக்கும் பாலிவுட்டை நம்பி வேறு மொழி திரையுலகங்களும் இருக்கின்றன” என்று இந்தியாவின் நிதி ஆதாரத்தில் தங்களுடைய பலம் என்னவென்பதையும் பறைசாற்றியிருக்கிறது. சுஷாந்த் மரணத்துக்குப் பிறகு பாலிவுட்டை பல அரசியல்வாதிகள் பேசியதும், அதற்கு பாலிவுட் எதிர்வினையாற்றியதும் ஒரு டீசர் தான். தற்போது நீதிமன்றத்தில் பதிவாகியிருக்கும் வழக்கு தீவிரமடையும் பட்சத்தில், இன்னும் அனல் பறக்கக்கூடிய எத்தனையோ நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம்.
-முத்து-
�,”