குருக்ஷேத்ரப் போருக்கு வா: மிஷ்கின், விஷாலுக்கு அறைகூவல்!

Published On:

| By Balaji

துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் சர்ச்சையால் ஏற்படும் ஒவ்வொரு சம்பவமும் சினிமாவின் மறுபக்க முகத்தைக் காட்டிக்கொண்டிருக்கிறது. துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் பணிபுரிய மிஷ்கின் விதித்த நிபந்தனைகளை ஏற்கமுடியாததால், அவரை படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து நீக்குவதாகவும், இனி இயக்குநர் பொறுப்பில் அமர்ந்து விஷாலே இந்தப் படத்தை முடிப்பதாகவும் அறிவித்திருந்தார். அத்துடன், இனி இவர்களைப் போன்ற நபர்களை வைத்து படம் இயக்காமல் தயாரிப்பாளர்கள் தப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார் விஷால். இதுதான் தற்போது மிகப்பெரிய பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது.

விஷாலின் கடிதம் வெளியானதுமே, மிஷ்கினுக்கு ஆதரவாக திரையுலகம் பேசத் தொடங்கியது. தற்போது சர்ச்சையிலிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியை எதிர்த்துப் போட்டியிட்ட சங்கரதாஸ் அணியிலுள்ள ஐசரி கணேசனின் வேல்ஸ் திரைப்பட நிறுவன ட்விட்டர் அக்கவுன்ட்டில் “மிஷ்கின் சார். நாங்க இருக்கோம். நாங்க எப்பவுமே உங்க பக்கம்தான்” என்று ஆறுதல் கூறியிருந்தனர். இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற வெப்சீரிஸ் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மிஷ்கின், விஷாலுக்குத் தனது பதிலை நேரடியாகக் கூறியிருக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற கண்ணாமூச்சி வெப்சீரிஸ் வெளியீட்டு விழாவில், அந்த வெப்சீரிஸ் பற்றி பேசியதைவிட விஷாலைப் பற்றி மிஷ்கின் பேசியதுதான் அதிகம். விஷாலின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பல விஷயங்களைக் குறிப்பிட்டு மிஷ்கின் பதில் கூறியிருந்தார். விஷாலின் குற்றச்சாட்டையும், அதற்கு மிஷ்கினின் பதிலையும் கீழே கொடுத்திருக்கிறோம்.

விஷால்: கனடா மற்றும் இங்கிலாந்தில் கதை எழுத விரும்பிய ஓர் இயக்குநர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்ச ரூபாய் செலவழித்து, அதற்கும் மேலாகப் பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தைத் தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் 13 கோடி ரூபாய் பணத்தைச் செலவழித்திருக்கிறோம். இங்கிலாந்தில் 3 முதல் 4 மணிநேரப் படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டது.

மிஷ்கின்: துப்பறிவாளன் 2 கதையை எழுதுவதற்காக நான் கேட்ட பணம் 7.5 லட்ச ரூபாய். அதில் நான் செலவு செய்தது 7 லட்சம்தான். ஆனால், திரைக்கதை எழுத மட்டும் 35 லட்ச ரூபாய் செலவு செய்ததாகத் தெரிவித்துள்ளார் விஷால். 35 லட்சம் செலவு பண்ணினேன் என்பதை ஆதாரத்துடன் அவர் நிரூபிக்க வேண்டும். நான் ஒரு தயாரிப்பாளர்களின் இயக்குநர். ஒரு கதை எழுதுவதற்கு 35 லட்ச ரூபாய் செலவு செய்கிறான் என்றால், அவன் இயக்குநராக வருவதற்கே தகுதி இல்லாதவன் என்று நான் சொல்வேன். விஷால் சொன்னவுடன் எழுதிய அனைவருமே, அதற்கான ஆதாரம் எங்கே என்று அவரிடம் கேட்க வேண்டும். 3 கோடி ரூபாய் இதுவரை செலவு செய்திருக்கிறேன் என்கிறார். 32 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியதாகவும், ஒரு நாளைக்கு 15 லட்சம் செலவு செய்தேன் என்றும் தெரிவித்துள்ளார். அதன்படி, 32 நாட்களுக்கு 4 கோடியே 50 லட்ச ரூபாய். அதற்கு மேல் 2 கோடி, 3 கோடி என சேர்த்தால் கூட 10 கோடி ரூபாய் வரை ஆகிறது. ஆனால், 13 கோடி என்கிறார். பரவாயில்லை. இந்த எல்லா செலவையும் விஷால் நிரூபிக்க வேண்டும்.

விஷால்: நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுகத் தயாரிப்பாளரோ, அறிமுகத் தயாரிப்பாளரோ, எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி அவர்கள் ஷூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்கக் கூடாது என்பதற்காகத்தான்.

மிஷ்கின்: படம் நின்று போனதற்கு அவர்தான் காரணம். தயாரிப்பாளர்கள் ஜபக், அகோரம், உதயநிதி ஆகியோரிடம் நான் எப்படி பணிபுரிந்திருக்கிறேன் என்று கேட்டுப்பாருங்கள். என் தாயைத் திட்டியதற்குப் பிறகு எப்படி படத்திலிருந்து வெளியே போகாமல் இருக்க முடியும்.

விஷால்: இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரைக் கெடுப்பது அல்ல. ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம். ஆனால், அனைத்து தயாரிப்பாளர்களும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘துப்பறிவாளன்-2’ படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே என்று நினைக்கிறேன்.

மிஷ்கின்: இவ்வளவு நாள் கழித்து ஏன் இப்போது ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்ட காரணம் என்ன என்று கேட்டீர்களா? 10 நாட்களாக என் அலுவலகத்துக்கு அலைந்து கதை வேண்டும், NOC வேண்டும் என்று கேட்டு என் உயிரை எடுத்து வாங்கிச் சென்றார்கள். நான் தயாரிப்பாளர் சங்கத்துக்கோ, இயக்குநர் சங்கத்தோ போயிருந்தால் இன்று போஸ்டர் ஒட்டியிருக்க முடியுமா? 8 மாதம் கதை எழுதினேன். 32 நாட்கள் ஷூட்டிங் நடத்தியிருக்கிறேன். அதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது NOC கொடுத்ததும் என்னைப் பற்றி தவறாகப் பேசுகிறார். உன்னால் ஒரு கதை எழுத முடியுமா? ‘சக்ரா’ படத்தின் கதைக்குக்கூட நான் உதவியிருக்கிறேன். இவனெல்லாம் என்னை மாதிரி படித்திருக்கிறானா?

மேலே குறிப்பிட்டுள்ள விஷாலின் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் கூறியவர், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலின்போது எதிர்த்தரப்பில் போட்டியிட்ட கலைப்புலி எஸ்.தாணு அவர்களை தரக்குறைவாக திட்டச் சொல்லித் தூண்டிவிட்டதையும் குறிப்பிட்டார் மிஷ்கின். அத்துடன் நிற்காமல், விஷாலின் அரசியல் ஆசையையும் குறிப்பிட்டுச் சொல்லி ‘தமிழ்நாட்டிலேயே உன்னை பாதுகாத்தவன் நான் ஒருவன்தான். இனி நான் உன்னிடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்ட மிஷ்கின் ‘உன் பக்கம் நியாயம் இருக்கிறதென நீ நிச்சயமாக நம்பினால் குருக்ஷேத்ரப் போருக்குச் செல்வோம் வா’ என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

**-சிவா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share