சமீபத்தில் மரணமடைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறுதியாக நடித்த ‘தில் பேச்சரா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘எம்.எஸ் தோனி: த அன்டோல்ட் ஸ்டோரி’ மூலம் இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கடந்த ஜூன் 14ஆம் தேதி திடீரென அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட் திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மர்மம் நிறைந்த அவரது மரணம் தொடர்பான வழக்கு விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுஷாந்தின் மரணத்தைக் குறிப்பிட்டு பல்வேறு சர்ச்சைகளும், விவாதங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அவர் கடைசியாக நடித்த ‘தில் பேச்சரா’என்னும் இந்தி திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று(ஜுலை 6) வெளியாகியுள்ளது.
2014ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ‘The Fault in our Stars’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக்காக ‘தில் பேச்சரா’ உருவாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தில் சஞ்சனா சங்கி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் ஜுலை 24ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படவுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சந்தாதாரர்களாக இல்லாதவர்களும் இப்படத்தை இந்தியாவில் இலவசமாகப் பார்க்கலாம் என்று அறிவித்துள்ளனர்.
தாங்கள் மிகவும் விரும்பி ரசிக்கும் சுஷாந்தை மீண்டும் உயிர்ப்புடன் காண செய்த ‘தில் பேச்சரா’ ட்ரெய்லர் ரசிகர்கள் பலரையும் கவலையடையவும் செய்துள்ளது. ட்ரெய்லர் வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் பத்து லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”