பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஃபினாலே நேற்று (ஏப்ரல் 10) நடைபெற்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் ஓடிடி வடிவமான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று மாலை 6.30 ல் இருந்து நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இறுதி போட்டியாளர்களாக நிரொ, பாலா, தாமரை, ரம்யா பாண்டியன் ஆகியோர் இருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக தொகுப்பாளர் சிம்புவை வரவேற்கும் விதமாக சிம்புவின் சிறு வயதில் இருந்து அவரது ‘மாநாடு’ பட ஹிட் பாடல் வரை அவரை ஆடல் பாடலோடு வரவேற்றார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியோடு தன் நினைவுகளையும் அனுபவத்தையும் சிம்பு பகிர்ந்து கொண்டார்.
ஜூலி நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட காட்சிகள் முன்பு ஒளிபரப்பப்படவில்லை. இப்போது ஜூலியும் இறுதி நிகழ்வுக்கு வந்து அவருக்கு முந்தைய சீசனில் கிடைத்த நெகட்டிவிட்டி போனதை பற்றி நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார். அவரது பயண வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
மேலும் முந்தைய சீசன்களில் இருந்து பிரியங்கா, பாவனி, அமீர், அபிஷேக் ராஜா என பலரும் வந்திருந்தார்கள். அதே போல முந்தைய சீசனின் வெற்றியாளர்களான ரித்திகா மற்றும் ராஜூ ஆகியோரும் வந்திருந்தனர்.
பிக்பாஸ் இறுதி போட்டியாளர்களுக்கு வீட்டிற்குள் இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அதுபோல இந்த அல்டிமேட்டில் தனியிசை கலைஞரான சியோனரது குழு இவர்கள பாடல்கள் மூலம் மகிழ்வித்தது.
பின்பு சிம்பு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சி முழுக்கவே மிகவும் பாசிட்டிவாக ஜாலியான மூடிலே சிம்பு இருந்தார். பின்பு நான்காவது இடத்தில் இருந்த தாமரை வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார். அவரது பயண வீடியோவும் போடப்பட்டது.
ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் பிக்பாஸ் தனிப்பட்ட முறையில் அழைத்து அவர்களது கேம் பற்றி பாசிட்டிவ்வான விஷயங்களை பேசி அவர்களுக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்பினார்.
மூன்றாவது இடம் ரம்யாவுக்கு இரண்டாவது இடம் நிரூப் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட்டின் வின்னர் பாலா.
வெற்றி குறித்து பாலா பேசுகையில், ‘முந்தைய சீசனில் நான் வெற்றி பெற மாட்டேன் என எனக்கு தெரிந்து இருந்தது. ஆனால் அப்போது என்னை நம்பி ஓட்டு போட்ட என் ரசிகர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்’ என்றார்.
நிரூப் பேசுகையில், ‘ஐந்தாவது சீசனில் எனக்கு ஐந்தாவது இடம் கிடைத்தது. அதில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருப்பது மகிழ்ச்சி’ என்றார்.
வெற்றியாளரான பாலாவுக்கு அல்டிமேட் கோப்பை மற்றும் 35 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**