பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகிய பிறகு அந்த இடத்தில் நடிகர் சிலம்பரசன் வந்துள்ள புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மாதம் முடிவடைந்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஓடிடி வடிவமாக பிக்பாஸ் அல்டிமேட் 24*7 என டிஸ்னி+ ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
ஆனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது அவர் நடித்து வரும் ‘விக்ரம்’ படப்பிடிப்பின் இறுதி கட்டத்திற்கு தேதிகள் ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து அவர் விலகுவதாக தெரிவித்தார். கமல் விலகிய பிறகு அந்த இடத்தில் யார் வருவார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. ஷ்ருதி ஹாசன், விஜய் சேதுபதி, சரத் குமார், ரம்யா கிருஷ்ணன் என பலரது பெயர்கள் அடிபட்டன.
ஆனால், நடிகர் சிலம்பரசன் தொகுத்து வழங்க போகிறார் என்பது தெரியவந்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான நடிகர் சிலம்பரசன் முதல் சீசனில் இருந்து ஐந்தாவது சீசன் வரை தொடர்ச்சியாக கவனித்து வருபவர். நிகழ்ச்சியில் தனக்கு பிடித்த போட்டியாளர்களை நிகழ்ச்சி முடிந்ததும் கூப்பிட்டு வாழ்த்துகளை தெரிவிப்பார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. மேலும் அவரது சிபாரிசில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் ஒருவர் களமிறங்குவார்கள். மஹத் உள்ளிட்ட போட்டியாளர்கள் உள்ளே வந்ததும் அப்படிதான்.
விஜய் தொலைக்காட்சிக்கு நடிகர் சிம்பு நெருக்கம் என்பதால் கமல் விலகியதும் உடனே சிலம்பரசனிடம்தான் முதலில் கேட்டிருக்கிறார்கள். சிலம்பரசனும் உடனே சம்மதித்து இருக்கிறார். சிம்பு பங்கேற்கும் எபிசோட் இந்த வார இறுதியில் வர இருக்கிறது. இதோடு ‘கலக்க போவது யாரு’ போட்டியாளர் சதீஷும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
**ஆதிரா**