பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் 12 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறினார் சிபி. இறுதி போட்டியாளராக வருவார் என பிக்பாஸ் பார்வையாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 12 லட்ச ரூபாயுடன் வெளியேறி இருக்கிறார்.
இந்த தகவல் நேற்றைய எபிசோட் ஒளிபரப்பாகும் முன்பே வெளியே கசிந்து விட்டதால் சமூக வலைதளங்களில் நேற்று காலையிலிருந்தே ட்ரெண்டிங்கில் இருந்தது. நேற்றைய எபிசோடில் பணத்துடன் வெளியேற வேண்டும் என சிபி முடிவெடுக்க என்ன காரணம்?
தற்போது ஏழு போட்டியாளர்கள் இருக்கிறார்கள். ஐந்து பேர் மட்டுமே இறுதி நிலைக்கு செல்ல முடியும் என்பதால் ஏழு பேரில் ஒருவர் குறைந்த மக்கள் வாக்குகள் அடிப்படையிலும் இன்னொருவரைப் பணம் எடுத்துக் கொண்டும் வெளியேறலாம் என்ற வகையிலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் எண்ணிக்கையை 7ல் இருந்து ஐந்தாகக் குறைப்பார்கள்.
இதில் இந்த வார இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படும் நிலையில் இன்னொருவருக்கு இந்த பணப்பெட்டி கொடுப்பதற்காகக் கடந்த சில தினங்களுக்கு முன்பே சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் பிக்பாஸ் வீட்டிற்குள்ளே வந்தார்.
அப்போது அவர், 3 லட்சத்திற்கான பணப்பெட்டியை போட்டியாளர்களுக்கு முன் வைத்தார். ஆனால் பணபெட்டியை எடுக்க யாரும் முன் வராததால் ஐந்து, ஆறு, ஒன்பது என அதிகரித்து ஒரு கட்டத்தில் rரூ.12 லட்சத்திற்கு வந்தது.
11 லட்சம் என பணப்பெட்டி வந்த போது அமீர், “வைல்ட் கார்டில் உள்ளே நுழைந்து இறுதி போட்டிக்கு செல்ல நான் டிக்கெட் டூ ஃபினாலே வைத்திருந்தாலும் இந்த சீசனின் வெற்றியாளராக வருவதற்கான வாய்ப்பு குறைவுதான். இத்தனை வருடம் முகம் தெரியாமல் இருந்தவனுக்கு பிக்பாஸ் நல்ல வெளிச்சம் கொடுத்துள்ளது. இன்னும் ஒரு வாரம்தானே? அதனால் இந்த பணத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்’’ எனச் சொன்னார்.
சக போட்டியாளர்கள் நல்ல முடிவு என வாழ்த்து தெரிவிக்க ‘சும்மா நடித்தேன்’ என பணத்தை எடுக்காமல் பின் வாங்கிவிட்டார்.
அதற்கடுத்து தான் பிக்பாஸ் 12 லட்சம் என பணத்தை உயர்த்தினார். அப்போது பணத்தைத் தான் எடுக்க இருப்பதாகச் சிபி முன் வந்தார். தாமரையின் குடும்ப பின்னணியை யோசித்து அவரிடம் நீங்கள் எடுக்கிறீர்களா என சிபி கேட்க ‘இல்லை, பிக்பாஸ் வீட்டில் இருப்பதுதான் தனக்கு முக்கியம்’ என தாமரை மறுத்து விட்டார்.
இதனையடுத்து சிபி, ’இறுதி போட்டிக்குச் செல்வேன் என்றாலும் என் மீதான நம்பிக்கை குறைந்து விட்டது மற்றும் பயம் வந்து விட்டது. மேலும் இந்த காரணங்களை வெளிப்படையாகத் தெரிவித்த பின்பு என்னால் இனி பிக்பாஸ் வீட்டில் போலியாக இருக்க முடியாது. தாமரைக்காகத்தான் யோசித்தேன். ஆனால், அவரும் பணம் எடுக்கவில்லை என்று சொல்லிவிட்டதால் நான் எடுக்கிறேன்’ என சொல்லி 12 லட்ச ரூபாய் பணத்துடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் சிபி.
**ஆதிரா**
�,