கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி எந்தப் படமும் வெளியாகவில்லை. படப்பிடிப்பை முடிப்பதில் துவங்கி ரிலீஸ் வரை பல்வேறு மாற்றங்களை தென்னிந்திய சினிமா சந்தித்துவருகிறது.
சின்ன பட்ஜெட் படங்களெல்லாம் ஓடிடியைத் தேர்ந்தெடுத்து வருகிறது. ஆனால், பெரிய நடிகர்கள் நடிக்கும் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் படங்களெல்லாம் கட்டாயம் திரையரங்கில் மட்டுமே வெளியாக வேண்டிய சூழல். தற்பொழுது, கொரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால் ஆகஸ்டிலிருந்து பெரிய ஹீரோஸ் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
முதலாவதாக ஆகஸ்ட் மாதத்தில் வருகிறார் மலையாள நடிகர் மோகன்லால். தேசிய விருது இயக்குநர் ப்ரியதர்ஷனின் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ‘மரக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்’ படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கேரளாவில் கொரோனா தாக்கம் குறையாவிட்டாலும், ரிலீஸ் திட்டத்தில் உறுதியாக இருக்கிறது படக்குழு. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்தும் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கிறது.
அடுத்து, யஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் படம் கே.ஜி.எஃப் சேப்டர் 2. கன்னடத் திரைப்படமான இதற்கு இந்தியளவில் பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. பாகுபலி இரண்டாம் பாகத்துக்கு எப்படி ரசிகர்கள் காத்திருந்தார்களோ, அதே ஆவலில் இப்படத்துக்காகவும் காத்திருக்கிறார்கள். பிரசாந்த் நீல் இயக்கியிருக்கும் இப்படம் இந்தியளவில் திரையரங்கில் வருகிற செப்டம்பர் 09ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
பாகுபலி எனும் பிரம்மாண்டத்தைக் கொடுத்த ராஜமெளலியின் அடுத்தப் படைப்பு ‘ஆர் ஆர் ஆர்’. தமிழில் ரணம் ரத்தம் ரெளத்ரம் எனும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியிருக்காம். அதோடு, இரண்டு மொழிகளுக்கான டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார்கள். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படமானது அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, திட்டமிட்ட தேதியில் வெளியிட பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது படக்குழு.
இதோடு, ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை படமும் இந்த வருடம் ரிலீஸூக்குத் தயாராகி வருகிறது. ஒரு சில நாட்கள் படப்பிடிப்பு மீதமிருப்பதால் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவுசெய்வதில் சிக்கல் நிலவுகிறதாம். முதலில் ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். தற்பொழுது, அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜை பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டிருக்கிறது. அப்படி வெளியானால், ஆர்.ஆர்.ஆர். படத்துடன் இணைந்து வலிமை படமும் வெளியாகும்.
இந்த வருட தீபாவளிப் பண்டிகையை அண்ணாத்த படத்துடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். சிவா இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இமான் இசையில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. ரஜினியின் 169வது படமான இது வருகிற நவம்பர் 4ஆம் தேதி வெளியாவதை படக்குழு உறுதி செய்துள்ளது.
எப்படியும், இன்னும் சில வாரங்களில் திரையரங்குகள் திறப்பதற்கான அனுமதி கிடைத்துவிடும் என்கிறார்கள். ஆக, ஒவ்வொரு மாதமும் ஒரு பெரிய ஹீரோ படத்தின் ரிலீஸை சந்திக்க இருக்கிறோம். அதனால், திரையரங்குக்கு கூட்டம் அதிகமாக வரும் என்று நம்புகிறார்கள் திரைத்துறையினர்.
**- தீரன்**
�,