கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நான்காம் சீசனுக்கான வேலைகள் தொடங்கிவிட்டன. சர்ச்சைகளையும் சலசலப்புகளையும் ஏன் வழக்குகளையும் கூட சந்திக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காம் பாகம் கடந்த ஜூன் மாதமே தொடங்கியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கால் திட்டமிட்டபடி தொடங்க முடியாமல், செப்டம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
சின்னத்திரை படப்பிடிப்புகள் இப்போதுதான் துவங்கியிருக்கின்றன. இந்நிலையில் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பை நடத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. பிக் பாஸ் வீட்டுக்குள் பல பேர் இருக்க வேண்டிய சூழலில் சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளின்படி நடத்த முடியாது என்பதால்தான் செப்டம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஓவ்வொரு சீசனிலும் எதிர்பார்ப்பைக் கிளப்புவது, கமலோடு பங்கேற்கும் நட்சத்திரங்கள் யார் யார் என்பதுதான். அந்த வகையில் நான்காம் சீசனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரே ஒரு போட்டோவால் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நான்காம் சீசனில் வர இருக்கிறார் என்ற பேச்சு நிகழ்ச்சித் தயாரிப்பு வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. ரம்யா பாண்டியனோடு, சுனைனா, அதுல்யா ரவி, வித்யுலேகா ராமன், கிரண், புகழ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள் என்ற தகவல்கள் கிடைக்கின்றன. ரம்யா பாண்டியன் என்ற ஒற்றை பங்கேற்பாளருக்காகவே பிக் பாஸ் இந்த முறை பெரும் ஹிட் ஆகலாம் என்கிறார்கள் ரசிகக் கோடிகள்.
அடுத்த வருடம் சட்டமன்றத் தேர்தல் வருவதால் கமல்ஹாசன் அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே ஷூட்டிங்கை சிறப்பு அனுமதி பெற்று விரைவாக நடத்தி முடிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள்.
–
**-வேந்தன்**�,