ஜெயம் ரவி நடிக்கும் 25ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள ‘பூமி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ரோமியோ ஜூலியட், போகன் போன்ற திரைப்படங்களில் ஏற்கனவே ஜெயம்ரவியை இயக்கிய லக்ஷ்மண் ‘பூமி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் நேற்று (மார்ச் 9) வெளியான நிலையில் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாசாவின் நிகழ்ச்சி ஒன்றில் ஜெயம் ரவி உரையாற்றுவதாகத் தொடங்கும் பூமி படத்தின் டீசர் படத்தின் பெயரைப் போன்றே, மண்ணையும் விவசாயிகளையும் மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. அத்துடன் விண்வெளி ஆராய்ச்சி, மார்ஸ் பயணம், ராக்கெட் ஏவுதல் போன்ற அம்சங்களும் டீசரில் இடம்பெற்றுள்ளது.
‘வட்டிக்குக் காசு வாங்கி விவசாயம் செஞ்சும், ஒரு வேளை சோத்துக்கு வழி இல்லாம இருக்கோம்’, ‘நாட்டோட எல்லா வளத்தையும் நாசம் பண்ணிட்டு நீங்க எல்லாம் என்ன சார் பண்ணப் போறீங்க?’ போன்ற டீசரில் இடம்பெற்ற வசனங்கள் விவசாயிகளின் அவல நிலையை உணர்த்துவதோடு, இயற்கையின் கொடையான வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்று மண்ணையும் மக்களையும் அழிக்கும் சிலரைக் கேள்வி கேட்பதாகவும் அமைந்துள்ளது.
“அடிமையா இருக்கோம்னு தெரிகிற வரைக்கும்தான் உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம் இங்க இருக்க முடியும். தெரிஞ்சுதுன்னு வெச்சுக்கோ” என்று ஜெயம்ரவி பேசுவதாக டீசர் நிறைவுபெறுகிறது. வலிமையான வசனங்கள் மற்றும் காட்சிகளின் மூலமாகப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்தப் படத்தில் தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் 2020ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**
�,”