விவசாயத்தைக் காப்பாற்றியதா பூமி?: திரைவிமர்சனம்!

Published On:

| By Balaji

நாசா விஞ்ஞானியான நாயகன் விவசாயத்தைக் காக்க ஏர்கலப்பையைத் தூக்கினால் என்னவாகும் என்பதே பூமி. ஜெயம்ரவியின் 25-வது படமாக நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. விவசாயத்தைக் காப்பாற்றியதா பூமி?

நாசாவில் பணியாற்றும் விஞ்ஞானியான பூமிநாதனின் லட்சியமே செவ்வாய் கிரகத்தைப் பூமி மாதிரி மனிதர்கள் வாழத் தகுதியுடைய கிரகமாக மாற்ற வேண்டுமென்பதுதான். அதற்காகச் செவ்வாயில் பயிரிட, மரங்கள் வளர்க்க ஒரு மாதத்தில் கிளம்பத் தயாராகிவருகிறார். இந்த ஒரு மாத இடைவெளியில் சொந்த கிராமத்துக்கு விடுமுறைக்காக வருகிறார். அப்படி வந்த இடத்தில் விவசாயம் இல்லாமல் மக்கள் துன்புறுவதைப் பார்க்கிறார். நாசாவுக்கு நோ சொல்லிவிட்டு, செவ்வாய்க்கு பைபை காட்டிவிட்டு சொந்தக் கிராமத்திலேயே விவசாயியாக மாறுகிறார் பூமி. அவரை விவசாயம் செய்ய விடாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் தடுக்கிறது. அதையெல்லாம் மீறி விவசாயத்தைக் காப்பாற்றினாரா பூமி? கார்ப்பரேட் வில்லன் என்னவானான் என்பதே திரைக்கதை.

பெரிய ஸ்டார் நடிகர்களுக்கு 25வது, 50வது படங்களை பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என விரும்புவார்கள். அதற்கு ஏற்ற கமர்ஷியல் மசாலாவாகப் படங்கள் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். குறிப்பாக திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என நினைப்பார்கள். இந்த இரண்டுமே பூமி படத்துக்கு கிடைக்கவில்லை.

ஜெயம்ரவி எப்போதும் போல நன்றாகவே நடித்திருக்கிறார். ஆனால், படம் முழுக்க ஜெயம்ரவி மட்டுமே நடித்திருப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை. எல்லோரும் சேர்ந்து விவசாயத்தைக் காப்போம் என்கிறார். குறைந்த பட்சம் நாயகி நிதி அகர்வாலுக்காவது சில வசனங்கள் பேசக் கொடுத்திருக்கலாம். வழக்கமான சினிமா ஹீரோயினாக வந்துபோகிறார் அவ்வளவே. படத்தில் காமெடியன் சதிஷ், சரண்யா ஆகியோர் ஒரு ஓரமாக இருக்கிறார்.

கடன் தொல்லையால் கஷ்டப்படும் விவசாயி தற்கொலை செய்துகொள்வது எனும் நிஜப் பிரச்சினையைப் பேசி படம் துவங்கினாலும், அதன்பிறகு படம் எங்கெங்கோ பயணமாகிறது. ஒரு மாதத்தில் செவ்வாய் கிரகத்துக்குக் கிளம்பப் போகும் விஞ்ஞானியை, இப்படி விடுமுறை கொடுத்து ஊருக்கு அனுப்புவார்களா என தெரியவில்லை.

முதலில் நாட்டு விதைகளைத் தேடிச் செல்கிறார் ஜெயம்ரவி. விவசாயம் செய்கிறார். எல்லா விவசாயிகளையும் இயற்கை வழி விவசாயம் செய்யச் சொல்கிறார். நமக்கு நாமே என நாமே ஒரு கார்ப்பரேட் கம்பெனியை துவங்குவோம் என்கிறார். கெட்ட கார்ப்பரேட்டுக்கு எதிரான நல்ல கார்ப்பரேட் என்கிறார். கடைசியாக என்ன சொல்ல வந்தார் எனத் தெரியவில்லை. அதோடு படமும் முடிந்துவிட்டது.

விவசாயத்தைக் காக்க வேண்டும், கார்ப்பரேட்டை அழிக்க வேண்டும் என இரண்டு விஷயங்களைப் பேசுகிறது படம்.ஆனால், இரண்டு சப்ஜெட்டுகளுமே மிகப்பெரிய ஏரியா. இரண்டையும் சேர்த்து ஒரே கதைக்குள் அடக்குவதில் சிரமம் இருப்பது திரைக்கதையில் தெரிகிறது. அமைச்சர், கலெக்டர், போலீஸ் என முதல் பாதியிலேயே ஒரு மாத்திரையைக் கொடுத்து ஈஸியாக டீல் செய்துவிடுகிறார். அதன்பிறகு, அவர்களைக் காணவில்லை, ஏன் எனத் தெரியவில்லை.

கார்ப்பரேட்டுகளுக்கான ஒற்றை முகமாக வரும் வில்லனின் கேரக்டர் எப்படி இருக்க வேண்டும். சும்மா, குடித்துக் கொண்டு போனில் ஹீரோவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். நீதிமன்றத்துக்கு வந்து திமிறு காட்டுகிறார், அமைச்சரைக் கொலைசெய்ய வருகிறார் என அடியாள் செய்ய வேண்டிய வேலையெல்லாம் செய்கிறார்.

கள்ளப் பணத்தை ஒழிக்க வேண்டுமெனச் சிவாஜியில் ரஜினி வருவார். அதுபோல, சினிமாத் தனமான விவசாயத்தைக் காக்கும் படமாகவே பூமி இருக்கிறது. விவசாயம் பற்றி எதார்த்தமாகப் பதிவிட எத்தனையோ விஷயங்கள் இருக்கிறது. இவற்றையெல்லாம் சினிமாத்தனத்துடன் ரியலிசத்துக்கு தூரத்திலிருந்து பேசுகிறது இந்தப் படம். அதுபோல, ஜல்லிக்கட்டுப் பிரச்சினையை ஒவ்வொரு சினிமாவும், பட வெற்றிக்காக ஒரு வசனமாகவாவது வைத்துவிடுகிறது. இதற்கு பூமி படமும் விதிவிலக்கல்ல. திடீரென மக்கள் கார்ப்பரேட் பொருட்களை எரிப்பது, தமிழன் விவசாயப் புரட்சி என எதுவுமே படத்தில் ஒட்டவில்லை.

படம் துவங்கிய முதல் 15 நிமிடங்களிலேயே இரண்டு பாட்டு, அதோடு விவசாயப் பிரச்சினையைப் பேசும் இடமெல்லாம் பின்னணியில் பாடல்கள், அவ்வப்போது சில அட்வைஸ் மழைகள் என நிறைகிறது படம்.

விவசாயம் vs கார்ப்பரேட் எனும் சப்ஜெக்டைத் தேர்ந்தெடுத்தது கிரேட். ஆனால், அதில் எதைப் பேசப் போகிறோம் என்பதில் இயக்குநர் லக்‌ஷ்மண் தடுமாறியிருக்கிறார் என்பதே உண்மை. ஏனெனில், நம்பக்கூடிய வகையில் திரைக்கதை இல்லையென்பதே படத்தின் பிரச்சினை. ஒரு கமர்ஷியல் படமாக மனதில் நிறைகிறது பூமி.

உண்மையிலேயே விவசாயிகளுக்கு என்ன பிரச்னை, அதை சரிசெய்ய என்ன தீர்வு என்பதை பேசாமல், ஹீரோ எப்படி விவசாயத்தைக் காப்பாற்றுவார் தெரியுமா என்பதாகவே படம் முடிகிறது.

அரசியல் சூழலில் எதார்த்தமான எந்த விஷயத்தையும் படம் அணுகவில்லை. கார்ப்பரேட்டை முழுமையாக ஒழிக்க வேண்டுமா, அல்லது கட்டுப்படுத்த வேண்டுமா? விவசாயத்தைக் காக்க வேண்டுமா அல்லது இயற்கை விவசாயத்தை வளர்க்க வேண்டுமா என எந்த தெளிவும் இல்லாத ஒரு சினிமாவே பூமி.

வழக்கமான விவசாயிகள் கண்ணீர், வில்லனை வீழ்த்தும் ஹீரோ, இறுதியில் வெற்றி எனும் கமர்ஷியல் விவசாயப் படம்தான். புதிதாக எந்த விஷயத்தையும் சொல்லவில்லை. அப்படிச் சொன்னதையும் சுவாரஸ்யமாகச் சொல்லவில்லை. வழக்கமான ஒரு கமர்ஷியல் படமாக ஒருமுறைப் பார்க்கலாம்.

**-ஆதினி**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share