ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பாரதிராஜா, அரசியலைக் காட்டிலும் அவருக்குக் கலை ஆர்வம் அதிகம். அந்த விதத்தில் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு” எனக் கூறியுள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் புதன்கிழமை(ஜூன் 10) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சித் தலைவர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அரசியலையும் கடந்து சினிமாவிலும் தயாரிப்பாளராக இருந்த அன்பழகனின் மறைவு பல திரைப்பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதிராஜா. வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “அன்பழகன்.. அரசியல்வாதியா.. சிறந்த பேச்சாளரா.. ஆளுமை உள்ளவரா.. அதற்கும் மேலாக…எங்கள் திரையுலகில் மிகச்சிறந்த தயாரிப்பாளர். நியாயமாக திரையுலகில் நிறைய சாதிக்க வேண்டியதிருந்தது. அரசியலைக் காட்டிலும் அவருக்குக் கலை ஆர்வம் அதிகம். அந்த விதத்தில் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு. நான் உதவி இயக்குநராக இருந்த காலத்தில், தி.நகரில் உள்ள பழக்கடை ஜெயராமன் கடைக்கு எதிரில்தான் தங்கும் அறை இருந்தது. அப்போதிலிருந்து பழக்கடை ஜெயராமன் பழக்கம். ஆனால், அன்பழகனோடு பெரிய பழக்கமில்லை. ஜெ.அன்பழகன் அரசியலில் ஈடுபட்டு ஆளுமையுடன் எதற்கும் பயப்படாமல் தன் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்து எந்த சபையாக இருந்தாலும் சரி அச்சப்படாமல் பேசி தன் ஆளுமையை நிரூபித்த ஒரு மனிதன்.
எனக்கு ஒரு கவலை என்னவென்றால் இது கொரோனா காலம். சமீபத்தில் கொரோனா குறித்து அன்பழகன் மிகத் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். எப்படியெல்லாம் நாம் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை எல்லாம் அற்புதமாகப் பேசியிருந்தார். அதைப் பேசி முடித்த மறுநாள் அவர் உடல்நிலை குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அதற்குப் பின்னால் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது. முதல் நாள் பேசியவர், மறுநாள் அவருக்கே தொற்று. உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலைக்குச் சென்று மீண்டும் திரும்ப வருகிறார். மீண்டும் கொரோனா தாக்குதல் உடல்நிலை மிகவும் மோசமடைந்து காலமாகிவிட்டார்.
அவர் பேசியதையும் நடந்த நிகழ்வையும் பார்க்கிறேன். இந்த மனிதனுக்கு இப்படியொரு விளைவா என்று. பணக்காரன், ஏழை, அரசியல்வாதி, இலக்கியவாதி என கொரோனா பார்ப்பதில்லை. அதுவொரு உயிர்க் கொல்லி. இப்போது நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம், அரசு என்ன சொல்கிறதோ, அதைப் பின்பற்ற வேண்டும். காவல்துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். மருத்துவத் துறையினர் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். இது நமக்காக, எதிர்கால சந்ததியினருக்காக. ஆகையால் நாம் முறையோடு இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஏனென்றால் அன்பழகன் மறைவு மிக மிக அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை நாம் பயமில்லாமல் சுற்றியிருக்கிறோம். அன்பழகனுடைய மறைவு எல்லாருக்கும் பாடமாக இருக்க வேண்டும். ஏனென்றால் சமூக விலகலை நாம் அலட்சியமாகப் பார்க்கிறோம். அனைவரும் மாஸ்க் போட வேண்டும். கையைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். நமக்கு வந்தால் தான் அது தெரியும். கொரோனா பிடியால் நாம் அன்பழகனுக்கு அருகிலிருந்து எதையும் செய்யமுடியவில்லை. அவர் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்திடைய வேண்டும்” என கூறியுள்ளார் பாரதிராஜா.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”