இயக்குநர் த.செ.ஞானவேல் எழுதி இயக்கிய ‘ஜெய் பீம்’ படத்தைத் தயாரித்து நடித்துள்ளார் சூர்யா. ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் கடந்த 2ஆம் தேதி வெளியானதிலிருந்து அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த கம்மாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் முதனை. அப்பகுதியைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. 1993ஆம் ஆண்டு ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜாக்கண்ணு காவல் துறையால் லாக்அப்பில் அடித்து கொலை செய்யப்பட்டார். பழங்குடி வேட்டை சமூகத்தைச் சேர்ந்த அவரது கொலை வழக்கில் தொடர்புடைய காவல் துறையினர் உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட ராஜாக்கண்ணு குறிப்பிட்ட அந்த திருட்டு நிகழ்வில் தொடர்பில்லாதவர் என்பதும் பிறகு விசாரணையில் தெரியவந்தது. இருளர் – பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கில் ஆஜராகி நீதி பெற்றுத் தந்தவர் வழக்கறிஞர் கே.சந்துரு. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்மாபுரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜா மோகன் மூலமாக வழக்கறிஞர் சந்துருவை பார்வதி அணுகவே வழக்கு உயர் நீதிமன்றத்தை அடைந்தது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.சந்துரு, வழக்கறிஞராகப் பணியாற்றிய காலகட்டத்தில் அவர் எடுத்து நடத்திய இந்த வழக்குதான் ‘ஜெய் பீம்’ படமாக உருவாகி பாராட்டுகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவை இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், பிரபுதேவா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து சந்துருவின் ஓவியத்தைப் பரிசளித்து கெளரவித்துள்ளனர். அவருடன் இயக்குநர் த.செ.ஞானவேலும் உடனிருந்து வாழ்த்துகளைப் பெற்றார். இந்தப் புகைப்படத்தைத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் சந்துரு.
**-இராமானுஜம்**
.�,