�
பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த 2015ல் வெளியான படம் ‘பாகுபலி- தி பிகினிங்’. படத்தை எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கி இருந்தார்.
இதன் இரண்டாம் பாகம் ‘பாகுபலி- the conclusion’ இரண்டு வருடங்கள் கழித்து அதாவது 2017ல் வெளியானது. வரலாற்று புனைவை அடிப்படையாக கொண்டு உருவான இந்த கதை இந்திய அளவில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, ‘பாகுபலி- ஃபிஃபோர் தி பிகினிங்’ அதாவது சிவகாமியை பற்றிய இணைய தொடராக எடுக்க இருப்பதாக படக்குழு அறிவித்தது. அதன்படி இந்த பாகுபலிக்கு முந்தைய வரலாற்று புனைவு கதையை முன்னணி ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் தயாரிக்க முன் வந்தது. தேவ கட்டா இயக்கத்தில் மிர்ணாள் தாக்கூர் நடிக்க இந்த கதையில் சில அத்தியாயங்கள் படமாக்கப்பட்டன.
ஆனால், இதில் நெட்ஃபிலிக்ஸ் குழு திருப்தி அடையாததால் தேவ கட்டாவிற்கு பதிலாக குணால் தேஷ்முக், ரிபுதாஸ் குப்தா ஆகியோர் படமாக்கினார்கள். ஆனால் அவர்களது படமாக்குதல் விதமும் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு திருப்தி அளிக்காத காரணத்தால் ‘பாகுபலி’க்கு முந்தைய கதையை கைவிட்டு விட்டார்கள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த இணைய தொடராக உருவான பாகுபலிக்கு மட்டும் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் சுமார் 150 கோடிக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது.
இது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கலாம்.
**ஆதிரா**
�,