லாக் டவுன் காரணமாக நாடு முழுவதும் வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக வனவிலங்குகள் பலவும் சாலைகளில் இறங்கி நடக்கத் துவங்கியுள்ளன.
குடும்பத்துடனும், குட்டிகளுடனும் வீதிகளில் ஒய்யார நடைபோடும் விலங்குகள் குறித்த செய்திகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள நாடுகாணி சுரம் பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ளது. நீலகிரி மலையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த காட்டுப் பாதையின் சாலை ஓரம் முழுவதும் தடுப்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அங்கே ஒரு சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வனப்பகுதி வழியாக வந்த சில காட்டு யானைகள் சாலையையும், தடுப்பு சுவரையும் கடந்து மறுபுறம் உள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளன. ஆனால் கூட்டத்தில் இருந்த குட்டி யானையால் தன்னை விடவும் உயரம் அதிகமான தடுப்பு சுவரைத் தாண்ட முடியவில்லை. முன்னங்கால்கள் இரண்டையும் சுவற்றின் மேற்பகுதியில் வைத்து உடலை மேலே எழுப்பி சுவரைக் கடக்க குட்டியானை முயன்றது. ஆனால் அதனால் தடுப்புசுவரின் மறுபுறம் வர இயலவில்லை. எனினும் தொடர்ந்து முயன்றுகொண்டே இருந்தது. யானைக்குட்டி பலமுறை முயற்சி செய்தும் முடியாததால் அதன் தாய் யானை அதற்கு உதவி செய்ய முன்வந்தது.
தன் குட்டியின் அருகே வந்து தன் கால்களுக்கு இடையே குட்டியை வைத்து மேலே ஏற்ற முயற்சி செய்தது. ஆனால் முதல் இரண்டு முயற்சிகளும் வெற்றியைத் தரவில்லை. அதன் பின்னர் சுவரின் மேலே வந்த தாய் யானை தன் தும்பிக்கையால் குட்டியைத் தாங்கி வெற்றிகரமாக மேலே எழுப்பியது. இந்த கண்கொள்ளா காட்சியை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளில் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
விடாமல் முயற்சி செய்த குட்டியானை மற்றும் அதனை விட்டுச் செல்லாமல் உதவிய தாய் யானையின் வீடியோ பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. எல்லா உயிரினங்களையும் மேன்மை அடைய செய்யும் தாய்மை குறித்தும், தாய்ப்பாசம் குறித்தும் குறிப்பிட்டு இந்த வீடியோவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”