தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019ஆம் வருடம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் செல்லாது என்றும், மூன்று மாதத்திற்குள் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய சக்திமிக்க தலைவர்கள் பொறுப்பில் இருந்தபோதுகூட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் சுயமாகவும், தன்னிச்சையான முடிவுகளை எடுக்கக்கூடிய அமைப்புகளாகவும் செயல்பட்டு வந்தது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் விருப்பத்திற்கேற்ப செயல்படக்கூடிய அமைப்புகளாக தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆகிய இரண்டையும் மாற்ற முயற்சித்து முடியாமல் போனது. நடிகர் சங்க பொதுச் செயலாளராக தயாரிப்பாளர் சங்க தலைவராக தேர்தல் மூலம் வெற்றி பெற்ற நடிகர் விஷால், அரசாங்கத்துடன் இணக்கமான உறவை மேற்கொள்ளவில்லை என்றாலும் அரசுக்கு எதிரான நிலையை எடுக்காமல் இருந்திருந்தால் தமிழக அரசு சினிமா சங்கங்கள் மீது கவனத்தை திருப்பி இருக்காது என்கின்றனர் மூத்த திரையுலக தயாரிப்பாளர்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் வகிக்கும் பொறுப்பை மறந்து, போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் விஷால். இது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல ஆளுங்கட்சிக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது என்கின்றனர் திரைப்படத் துறையில் இருக்கும் அதிமுக ஆதரவாளர்கள்.
எம்ஜிஆர் கருணாநிதி ஜெயலலிதா போன்ற முதல்வர்கள் இதுபோன்ற நேரங்களில்தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடியாக முடிவெடுப்பார்கள். தற்போதைய அரசு வெளிப்படையாக எந்தவிதமான அதிருப்தியையும் காட்டவில்லை. ஆனால், விஷால் தனது பதவியை தன்னுடைய பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுத்திய அளவிற்கு உறுப்பினர்கள் நலன்களுக்காக பயன்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சக நிர்வாகிகள் எந்த ஆலோசனையையும் கவனத்தில் கொள்ளாமல் செயல்பட்டதன் காரணமாக அவருக்கு எதிரான மனநிலை திரையுலகில் உருவானது. இதனை ஊதி பெரிதாக்கும் முயற்சிக்கு தனது ஆதரவாளர்களை ஆளுங்கட்சி பயன்படுத்திக்கொண்டது. அதன் விளைவாக தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் இரண்டையும் எதிர்ப்புக் குரல் இன்றி திரைப்படத் துறையினரை பயன்படுத்தி அரசின் தனி அதிகாரி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமனம் செய்து தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், அவர் நடத்திய தேர்தலை செல்லாது என்று அறிவித்தது. இது எதிர்காலத்தில் யாரை நம்பி தேர்தல் நடத்துவது, வாக்களிப்பது என்கிற கேள்வியை தேர்தலில் போட்டியிட்ட இரண்டு அணி தரப்பிலும் உள்ளவர்கள் கேட்கின்றனர். அடுத்து நடைபெறக்கூடிய தேர்தல் இதுபோன்று ரத்து செய்யப்பட்டால் எங்கே போய் முறையிடுவது என்ற தங்கள் கோபத்தை பகிரங்கமாக சொல்ல முடியவில்லை என்பதை பத்திரிக்கையாளர்களிடம் பேசத் தொடங்கியுள்ளனர்.
சரத்குமார் தலைமையிலான அணியும், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்ட 2015 நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்று நடிகர் சங்கப் பொறுப்புகளில் விஷால் தலைமையிலான அணி அமர்ந்திருந்த காலத்தில் எண்ணற்ற சர்ச்சைகளும், பிரச்னைகளும் வெடித்தன. இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வாக பார்க்கப்பட்டது, நான்காண்டு ஆட்சிக் காலம் முடிந்து 2019இல் நடைபெற்ற தேர்தல். திரையுலகம் பெரிதும் எதிர்பார்த்த நடிகர் சங்கத் தேர்தல் 2019ஆம் வருடம் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியை, கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணி எதிர்த்துப் போட்டியிட்டது.
பல்வேறு குளறுபடிகள் தேர்தலில் நடைபெற்றிருக்கிறது என நடிகர் சங்க உறுப்பினர்களான பெஞ்சமின் மற்றும் ஏழுமலை ஆகிய இருவரும் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை தடை செய்துவிட்டு, நீதிமன்றத்தின் சார்பில் தனி அதிகாரியாக கீதா என்பவரை நியமித்து, சங்கத்தின் நிர்வாக மேற்பார்வையை நடத்த வழிசெய்தது. இதனை எதிர்த்தும், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணவேண்டும் என்றும் கார்த்தி, விஷால், நாசர் ஆகியோர் மனு சமர்ப்பித்திருந்தனர். இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம், இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பில் “நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தவேண்டிய கடமைகளை பதவிக்காலம் முடியும் முன்னரே செய்திருக்கவேண்டும். ஆனால், பதவிக்காலம் முடிந்த பின்னர் தேர்தலை நடத்தத் திட்டமிட்டதுடன், பதவியில் இல்லாதபோது பல ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றனர். இது விதிகளுக்கு எதிரானது. இதனடிப்படையில் நடைபெற்ற தேர்தலையும், அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளையும் எண்ணி முடிவினை அறிவிக்கமுடியாது. எனவே, மூன்று மாதத்திற்குள் நடிகர் சங்க உறுப்பினர்கள் பட்டியலை சரிபார்த்து, அதனடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும் என்றும், இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல் தாஸ் அவர்கள் நியமிக்கப்படுகிறார் என்றும், அதுவரை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி கீதா அவரது பதவியில் இருந்து நிர்வாகத்தை கவனிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
விஷால் தரப்பு அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்வதற்குள் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளது பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணி. நீதிமன்ற தீர்ப்பு சம்பந்தமாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ஐசரி கணேஷ், ஏற்கனவே நடைபெற்ற தேர்தலுக்கான செலவு சுமார் 30 லட்ச ரூபாய் இப்படி ஒரு சூழல் உருவாகக் காரணம் விஷால் நடவடிக்கை. இருந்தபோதிலும் இதனை எதிர்த்து நாங்கள் நீதிமன்றம் செல்ல மாட்டோம். எங்கள் அணியில் சில மாற்றங்களோடு தேர்தலை சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறி விஷால் தரப்பு நீதிமன்றம் செல்வதற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.
மேலும் பேசும் பொழுது “நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதே எனது பிரதான நோக்கம். பொறுப்புக்கு வந்த விஷால் தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஒரு முயற்சியை நான் எடுத்த பொழுது அதனை நடைமுறைப்படுத்த ஒத்துழைப்பு தராமல் உதாசீனப் படுத்தினார். கார்த்தி, விஷால் இருவரும் இணைந்து நடிக்கும் படமொன்றை தயாரிக்க நான் ஒப்புக்கொண்டு அதன்மூலம் கிடைக்கக்கூடிய 15 கோடி ரூபாய் பணத்தை நடிகர் சங்க கட்டிடம் கட்ட நான் வழங்குவதற்கு சம்மதித்தேன். பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிய பின்னரும் விஷால் ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு வரவில்லை. அதனால் அந்தப்படம் கைவிடப்பட்டது இப்படிப்பட்ட நடிகர் சங்க பொறுப்புக்கு வந்தால் என்ன ஆகும் என்பதை நடிகர்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்” என்றார்.
‘நடிகர் சங்கத்தில் ஓய்வூதியம் பெறக்கூடியவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் என்னுடைய சொந்த பொறுப்பில் ஓய்வூதியத்தை மாதம்தோறும் வழங்கப் போகிறேன்’என்று கூறியதன் காரணமாக பாக்யராஜ் தலைமையிலான அணிக்கு ஆதரவு தளம் அதிகரித்து வருகிறது. விஷால் தரப்பில் விசாரித்த பொழுது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக வழக்கு தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரபூர்வமற்ற முறையில் கூறினார்கள்.
அப்படியொரு நடவடிக்கைக்கு விஷால் தரப்பு போகும் பட்சத்தில் அந்த வழக்கு எப்போது முடிகிறதோ அப்போதுதான் சங்கத்துக்கு தேர்தல் நடக்கும். அதுவரையிலும் நடிகர் சங்க கட்டடம் கட்டுவது தாமதம் ஆகிவிடும். எனவே, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் போகலாமா என்ற ஆலோசனையில் இருந்த விஷால் தரப்பினரை குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது ஐசரி கணேஷ் பேச்சு.�,