kடி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி!

Published On:

| By Balaji

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக கோப்பையை வென்றுள்ளது.

ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் நேற்று (நவம்பர் 14) இரவு நடைபெற்றது. இதில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதேசமயம் மற்றொரு தொடக்க வீரர் வார்னர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அவர் 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 53 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்தார்.

இதேபோல் நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்த மிட்செல் மார்ஷ், விரைவாக அரை சதம் கடந்ததுடன், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுமுனையில் மேக்ஸ்வெல்லும் பொறுப்புடன் ஆடினார்.

இதனால், ஆஸ்திரேலிய அணி 7 பந்துகள் மீதமிருந்த நிலையில், 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்ஷ் 50 பந்துகளில் 77 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதன்மூலம், முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி உள்ளது.

மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருதையும், டேவிட் வார்னர் தொடர் நாயகன் விருதையும் (3 அரை சதத்துடன் 289 ரன்) பெற்றனர்.

டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஓர் அணி விரட்டிப்பிடித்த (சேசிங்) அதிகபட்ச இலக்கு இதுதான். 2010ஆம் ஆண்டில் இறுதி ஆட்டத்தில் தோற்றிருந்த ஆஸ்திரேலியா முதன்முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு ரூ.12 கோடியும், இரண்டாவது இடம்பிடித்த நியூசிலாந்துக்கு ரூ.6 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

**-ராஜ்**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share