அசோக் செல்வன், நிஹாரிகா ஆகியோர் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் சின்ன பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ஓ மை கடவுளே படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் அசோக் செல்வன் படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே மூன்று படங்கள் ஒப்பந்தமாகியுள்ள இவர், சுவாதினி என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர் சுவாதினி. விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் பட ஹீரோயின் நிஹாரிகா கொனிடெலா, இரண்டு வருடங்கள் கழித்து இப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். நிஹாரிகா சிரஞ்சீவியின் சகோதரர் நாக பாபுவின் மகளாவார்.
இந்நிலையில், இந்த படத்தின் பணிகள் சின்ன பூஜையுடன் நேற்று(ஜூன் 10) தொடங்கப்பட்டுள்ளது. கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் இசையமைப்பாளராக லியான் ஜேம்ஸ், ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.சூர்யா மற்றும் படத்தொகுப்பாளராக ரிச்சர்ட் கெவின் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
இப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.செல்வகுமார் கூறும் போது, “நாங்கள் எப்போதும் புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்த ஆர்வமாக உள்ளோம். மேலும் உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைக்கேற்ற உள்ளடக்கங்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். பாலிவுட்டின் மிகவும் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸின் ஹம் ஆப்கே ஹை கவுன், ஹம் சாத் சாத் ஹைன் போன்ற குடும்ப பொழுதுபோக்கு படங்களை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து பார்ப்பவன் நான். இதேபோன்ற முன்னுதாரணத்தின் அடிப்படையில் குடும்பம், நகைச்சுவை, காதல், எமோஷன் ஆகியவற்றின் பொருத்தமான கலவையைக் கொண்ட ஸ்கிரிப்ட்களை நான் தேடிக்கொண்டிருந்தபோது, சுவாதினி ஒரு கச்சிதமான ஸ்கிரிப்டுடன் எங்களை அணுகினார்.
மேலும், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேல் காலம் எடுத்து குடும்பங்களை ஈர்க்கும் விஷயங்கள், சிறப்பான குணாதிசயங்களுடன் தனது ஸ்கிரிப்டை மறுசீரமைத்துள்ளார். ஓ மை கடவுளே படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு அசோக் செல்வனின் தொழில்ரீதியான வளர்ச்சி உயர்ந்துள்ள நிலையில், இப்படத்தின் மீதான நம்பிக்கையை இன்னும் அதிகமாக பெற்றுள்ளேன். தற்போதைய நிலைமை இயல்பு நிலைக்கு வந்த பிறகு படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்துள்ளோம். படப்பிடிப்பு தொடங்கி சரியாக 5 மாதங்கள் கழித்து இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்.
**-முகேஷ் சுப்ரமணியம்**�,”