நடிகர் ஆர்யா-நடிகை சாயிஷா தம்பதியரின் முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு இருவரும் இணைந்து நடித்த ‘டெடி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர ஜோடியான ஆர்யா மற்றும் சாயிஷாவின் திருமணம் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி நடைபெற்றது. மகிழ்ச்சி நிறைந்த திருமண வாழ்க்கையின் முதலாமாண்டு நிறைவு விழாவை இருவரும் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பாக தங்கள் சமூக வலைதளப்பக்கத்திலும் அவர்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
இந்த தருணத்தில் இருவரும் இணைந்து நடித்த டெடி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆர்யா-சாயிஷா ஜோடி ஏற்கனவே கஜினிகாந்த், காப்பான் போன்ற திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள டெடி திரைப்படத்தை நாணயம், மிருதன், டிக் டிக் டிக் போன்ற படங்களை இயக்கிய சக்தி சவுந்தர்ராஜன் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டெடி டீசரில் மனிதர்களைப் போன்று பேசும் டெடி பியர் பொம்மை ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஹலோ சார் என்று டெடி பொம்மை கூறுவதைக் கேட்டு அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். டீசரிலும் டெடி பொம்மையின் சேட்டைகள், விளையாட்டுகள் இடம்பெற்று ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இளம்பெண்கள் கடத்தப்படுதலும் அவர்களுக்கான தேடுதல் வேட்டையும் படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது என்பது டீசரின் மூலம் தெரிகிறது.
அனைவரையும் ரசிக்க வைத்துள்ள இந்த டீசர் யூட்யூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளது. இந்தப்படத்தில் கருணாகரன், சதீஷ், இயக்குநர் மகிழ் திருமேனி, சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”