தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் அருண் விஜய் – ஹரி கூட்டணியில் தயாராகியுள்ள யானை படமும் உள்ளது .
முதலில் மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்ட யானை ஜூன் 17 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இயக்குநர் ஹரி, கதாநாயகன் அருண்விஜய் இருவரும் தமிழ்நாடு முழுவதும் கலந்துகொண்டுள்ளனர். ஆனால் அறிவித்தபடி ஜூன் 17 அன்று யானை வெளிவராது ஜூலை 1 தான் படம் வெளியாகும் என இன்று காலை முதல் செய்தி கசியத் தொடங்கியது.
விக்ரம் படம் வசூல் குறைவின்றி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருப்பதால் யானை படத்திற்கு தேவையான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வது சிரமம் என காரணம் கூறப்படுகிறது. ஆனால் இது காரணமல்ல படத்தின் ஏரியா உரிமைகள் இன்று வரை வியாபாரமாகவில்லை. தமிழ்நாடு உரிமை வாங்கிய கேகேஆர் நிறுவனம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தயாரிப்பாளருக்கு பணத்தை செலுத்தவில்லை.
அதனால்தான் படம் சம்பந்தமான புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு வழங்குவதற்குகூட தயாரிப்பாளர் தரப்பில் கொடுக்கவில்லை என்பதுடன் யானை ஜூன் 17 வெளியீடு என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் இல்லை என்கின்றனர். ஹரி – அருண்விஜய் இருவரும் திட்டமிட்ட அடிப்படையில் ஜூன் 17 அன்று யானை வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். ஆனால் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்கின்றனர் வியாபாரிகள் வட்டாரத்தில்.
ஒரு திரைப்படத்தின் தயாரிப்பு என்பதை கடந்து அதன் உரிமைகளை வாங்குபவர்களும், அவர்களின் வியாபார அணுகுமுறையும் மிக முக்கியமானது. யானை படத்தின் தமிழ்நாடு உரிமை வாங்கியுள்ள கேகேஆர் நிறுவனம் அடிப்படையில் வட்டி தொழில் செய்யும் நிறுவனம். சில மீடியேட்டர்கள் யானை படத்தின் உரிமையை வாங்கினால் கோடிகளில் லாபம் கிடைக்கும் என்று கூறிய ஆசை வார்த்தைகளை நம்பி படத்தின் உரிமையை அதிக விலைக்கு வாங்கிவிட்டனர்.
ஆனால் வாங்கிய விலைக்கு கூட மீடியேட்டர்களால் யானை படத்தை இன்று வரை வியாபாரம் செய்து கொடுக்க முடியவில்லை. இதனால் யானை படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் கொடுக்க தயாரிப்பாளர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. படத்தை தயாரிப்பதை காட்டிலும் அந்தப் படத்தை வியாபாரம் செய்யவும், வெளியிடவும் சரியான நபர்களை, நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும் இல்லையென்றால் யானைகாலில் மிதிபட்டு நொறுங்கும் தேங்காயாக மாறிவிடும் என்பதற்கு சமகால உதாரணமாக மிக சிறந்த படைப்பாக தயாராகி இருக்கும்”யானை” படம் உள்ளது என்கின்றனர் தமிழ் சினிமா வியாபாரிகள் வட்டாரத்தில்.
[‘யானை’ வருமா? முடங்குமா?](https://minnambalam.com/entertainment/2022/03/18/49/yaanai-movie-will-come-or-not)
**-இராமானுஜம்**