‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை அடுத்து இயக்குநர் அருண்ராஜா காமராஜ் கார்த்தியை இயக்குகிறார்.
நடிகர், பாடகர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட அருண்ராஜா காமராஜ் கடந்த 2018ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘கனா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சமீபத்தில் இந்தப் படம் சைனாவில் வெளியிடப்பட்டு பரவலான பாராட்டுகளையும் பெற்றது. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்தியாவில் வெளியான முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்ற ‘ஆர்ட்டிகிள் 15’ திரைப்படம் தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்துள்ளார். உதயநிதி, தான்யா ரவிச்சந்திரன், இளவரசு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியானது.
படத்தின் மையக் கதை ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்து, அருண் ராஜாவுக்கும் பாராட்டுகளைப் பெற்று கொடுத்து வருகிறது. இந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தில் நடிகர் கார்த்திக்கு வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இப்போது நடிகர் கார்த்தி ‘பொன்னியின் செல்வன்’, ‘சர்தார்’ உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு ராஜுமுருகன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் அருண்ராஜா இயக்கும் படத்தில் நடிப்பார் என தெரிகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
**- ஆதிரா**