இந்தப் பொங்கலுக்கு விஜய் நடிப்பில் மாஸ்டரும், சிம்பு நடிப்பில் ஈஸ்வரனும் வெளியாக இருப்பது உறுதியாகியிருக்கிறது. அதற்கு காரணம், திரையரங்கில் 100 சதவிகிதம் இருக்கைகளை நிரப்பிக் கொள்ளலாம் என அரசு அறிவித்ததே. இல்லையென்றால், இரண்டு படமுமே பின்வாங்கியிருக்கும். அப்படி இவ்விரு படங்களும் பின்வாங்கியிருந்தால் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் தனுஷின் ஜெகமே தந்திரம், கார்த்தியின் சுல்தான் மாதிரியான பெரிய பட்ஜெட் படங்களும் திரையரங்க ரிலீஸ் குறித்து யோசித்திருக்க வாய்ப்பே இல்லை.
திரையரங்கில் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகவில்லை என்றால், அனைத்துப் படங்களும் ஓடிடிக்கு நகர்ந்திருக்கும். திரையரங்குக்குப் புத்துயிர் கிடைப்பது கேள்விக்குறியாகியிருக்கும். அப்படியெல்லாம் ஆகிவிடக் கூடாது என்பதற்காகத்தான், விஜய், சிம்பு மற்றும் குஷ்பு உள்ளிட்ட பல திரைத்துறையினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதியும் கிடைத்தது. பின்னர், தயாரிப்பாளர் சங்கங்கள், விநியோகஸ்தர் சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகியன வரவேற்பு தெரிவித்து சமீபத்தில் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், நடிகர் அரவிந்த்சாமி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். என்னவென்றால், திரையரங்குகளில் 100% இருக்கைகளை நிரப்புவது தவறானது. இப்போதைய சூழலில் திரையரங்கில் 50% நிரப்புவதே சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு, விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கும் எனிமி படத்தின் தயாரிப்பாளர் வினோத் காட்டமாகப் பதிலளித்துள்ளார். “ எம்டிசி பேருந்துகள் 100% உடன் இயங்கத் தொடங்கியபோது இதை ஏன் கூறவில்லை? ரயில்கள், விமானங்கள், மால்கள், டாஸ்மாக், அரசியல் கூட்டங்கள், விடுதிகள் போன்றவை முழுமையாக இயங்கும்போது ஏன் சினிமா மட்டும் இயங்கக் கூடாது?மக்கள் விரும்பினால் வீட்டிலேயே இருக்க முடியும், தியேட்டர்களுக்குச் செல்ல யாரும், யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.
அரவிந்த் சாமியின் இந்தக் கருத்துக்கு திரையுலகிலேயே பலமான எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
**- ஆதினி**�,