இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருக்கும் ‘அரண்மனை 3’ படத்தின் பாடல் வீடியோ பத்து லட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது.
தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும்வண்ணம் மாற்றிய படம்தான் அரண்மனை திரைப்படம்.
நகைச்சுவை படங்களை இயக்குவதில் பெயர்பெற்றவரான இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது ‘அரண்மனை 3’ ரிலீசுக்குத் தயாராகியுள்ளது.
இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி மூவரும் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதன்முறையாக இயக்குநர் சுந்தர்.சியுடன் இந்தியாவின் முக்கிய சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்னும் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களைவிட இரு மடங்கு பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களை குழந்தைகள் கொண்டாடிய நிலையில், இந்தப் படமும் குழந்தைகளுக்குப் பிடிக்கும் வகையில் மிகச் சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது
படத்தின் முதல் பார்வை வெளியீட்டுக்குப் பிறகு பாடலின் வீடியோ காட்சி ஒன்று வெளியிடப்பட்டது ஆர்யா – ராஷிகண்ணா நடித்திருந்த இந்தப் பாடல் வீடியோ காட்சி, வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தியாவின் டிரெண்டிங் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது என படக்குழு அறிவித்துள்ளது. 24 மணி நேரத்துக்குள்ளாக இந்த வீடியோ பத்து லட்சம் பார்வைகளைக் கடந்து வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் படத்தை வலைதளத்தில் வெளியிட, போட்டிகள் இருந்தாலும், தியேட்டரில்தான் வெளியிட வேண்டும் என்பதில் தயாரிப்பு தரப்பு உறுதியாக இருந்தனர்.
இந்த நிலையில் திரைத்துறையில் இருந்து இந்தப் படத்தை பார்த்த சில முக்கியஸ்தர்கள் இந்தப் படம் குடும்பத்தோடு திரையங்கில் கொண்டாட்டமாகப் பார்க்க வேண்டிய படம். இதைத் திரைக்கு கொண்டு வாருங்கள் என்று சுந்தர்.சியிடம் கூறியுள்ளனர்
இதைத் தொடர்ந்து அரண்மனை 3 படத்தைத் திரையரங்கில் வெளியிடும் வேலைகளை செய்து வருகிறார் இயக்குநர் சுந்தர்.சி.
**-இராமானுஜம்**
�,