பொன்னியின் செல்வன்,அயலான், கோப்ரா உள்ளிட்ட நான்கைந்து படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்தியில் தனுஷ் நடித்திருக்கும் அட்ராங்கிரே படமும் இருக்கிறது. இவ்வளவு படங்கள் இருக்கும்போதும் கடந்த மூன்று மாதங்களாக அவர் சென்னையில் இல்லை. குடும்பத்தோடு துபாயில் இருக்கிறாராம்.
எக்ஸ்போ 2020 ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் நடத்தப்படுகிறது. அக்டோபர் 2021 முதல் 2022, 31 மார்ச் வரை நடக்கும் எக்ஸ்போ 2020 நிகழ்ச்சியில் 191 நாடுகள் பங்கேற்க உள்ளன.
‘மனங்களை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற முழக்கத்துடன், தி எக்ஸ்போ 2020 துபாய் மிக முக்கியமான நிகழ்வு என்று கூறப்படுகிறது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் முக்கியப் பங்காற்றவிருக்கிறார். அந்த வேலைகளுக்காகத்தான் அவர் துபாய் சென்றுள்ளார். மார்ச் 2022 இல் அந்த பணிகள் முடிந்த பின்புதான் சென்னை திரும்புவார் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.
ரஹ்மானுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குடியேறும் வாய்ப்பிருந்தும் அதைத் தவிர்த்து வந்தார். மாதத்தில் பாதி நாட்களுக்கும் மேல் வானத்திலேயே பறந்து கொண்டிருந்தாலும் சென்னை வீட்டுக்கு வராமல் இருக்கமாட்டார். அதற்குக் காரணம்? அவரது அம்மா. அவருக்காக உலகில் எங்கிருந்தாலும் அடிக்கடி சென்னை வந்து போவார் என்கிறார்கள் ரஹ்மானுக்கு நெருங்கிய வட்டாரத்தில்.
2020 டிசம்பரில் அவருடைய அம்மா மறைந்ததும், அவருக்கு இருந்த அந்த கடமை நீங்கிவிட்டது. அதனால், சென்னையை விட்டுவிட்டு குடும்பத்துடன் துபாய் சென்று தங்கியிருக்க முடிகிறது என்றவர்கள், ஆனாலும் அவருடைய வேலைகள் எதுவும் தடைபடவில்லை. எல்லாப் படக்குழுவினருடனும் தொடர்பில் இருக்கும் அவர், இப்போது 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
திரையுலகில் முப்பது ஆண்டுகளை எட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழில் தொடங்கி உலகம் முழுக்கப் பரவியிருக்கும் அவர் இந்த முப்பதாண்டுகளில் ஒருநாள் கூட ஓய்வாக இருந்ததில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
**-இராமானுஜம்**
�,