அனுஷ்கா திருமணம்: பிரபாஸுக்குப் பதிலாக சிக்கிய கிரிக்கெட் வீரர்!

Published On:

| By Balaji

ஆயிரத்து தொள்ளாயிரத்துச் சொச்சமாவது முறையாக அனுஷ்காவின் திருமணம் பற்றிய வதந்தி வெளியாகியிருக்கிறது. சமீப காலங்களில் முதன்முறையாக நடிகர் பிரபாஸ் அல்லாமல் வேறு ஒருவருடன் அனுஷ்காவுக்குத் திருமணம் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. பாகுபலி படத்துக்கு முன்பாகவே பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கும் திருமணம் என்று பலமுறை பேசப்பட்டது. அது பாகுபலி திரைப்படத்தில் இருவரும் நடிக்கத் தொடங்கியதும் வெளியான படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து நிச்சயமாக இருவருக்கும் திருமணம் என அடித்துப் பேசாத குறையாகக் கூறினார்கள். ஆனால், இப்போது இருவரும் பாகுபலி திரைப்படம் முடிந்து வெவ்வேறு வழிகளில் சென்றுவிட்டதால் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் அனுஷ்காவுக்குத் திருமணம் என்று கூறியிருக்கின்றனர். யார் அந்த கிரிக்கெட் வீரர்?

ரஞ்சிப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் வீரர், வடஇந்தியாவைச் சேர்ந்தவர், பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கூறப்பட்டதே தவிர அந்த வீரர் யார் என்பது குறித்து எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை. அளவுக்கு மீறி அனுஷ்காவின் திருமண ஏற்பாடுகளை ஊடகங்களே கவனித்துக்கொண்டதால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று மறுத்திருக்கிறார் அனுஷ்கா.

தமிழ் முரசு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கிரிக்கெட் வீரருடன் உங்களுக்குத் திருமணம் நடைபெறப்போகிறதாமே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘அந்த கிரிக்கெட் வீரர் யாரெனச் சொன்னால் நானும் பார்த்துவிடுவேன். ஆனால், அதைச் சொல்லாமல் திருமணம் என்று மட்டும் சொல்கிறார்கள். எனக்கும் என் குடும்பத்துக்கும் தெரிந்து இதுவரை யாரும் அப்படி மாப்பிள்ளை இல்லை. இவர்கள் சொல்வதை வைத்து வேண்டுமென்றால் தேடலாம். மற்றபடி என் திருமணம் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால், என் திருமணம் வீட்டில் பார்த்து நிச்சயிக்கப்பட்டதாக மட்டுமே இருக்கும்” என்று கூறியிருக்கிறார் அனுஷ்கா.

இன்னொரு வகையில், இந்தத் திருமண வதந்தியைக் கிளப்பிவிட்டது அனுஷ்கா நடித்துள்ள திரைப்படத்தைச் சார்ந்த யாராவதாக இருக்குமோ என்ற வகையில் ஒரு சந்தேகம் எழுந்துள்ளது என்கின்றனர். இதனால், அனுஷ்கா – மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள நிசப்தம் திரைப்படத்துக்குத் தொடர்புடையவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். படத்தின் புரமோஷனுக்காக அனுஷ்காவுக்குத் திருமணம் என்று வதந்தியைக் கிளப்பிவிட்டு, திருமணத்துக்குப் பின் நடிக்க மாட்டார் என்ற அச்சத்தையும் ரசிகர்களிடம் உருவாக்குவதன் மூலம் அனுஷ்காவின் கடைசி திரைப்படத்தைப் பார்த்துவிடுவோம் என்று ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என்ற அதரப் பழைய டெக்னிக்கைப் பயன்படுத்தியது யார் என்பதைக் கண்டுபிடித்துக்கொடுங்கள் என்று அனுஷ்கா கேட்டிருப்பதாகத் தலையைப் பிய்த்துக்கொண்டு நிற்கிறது புரொடக்‌ஷன் டீம். நடிகைகளை வைத்து படத்துக்கு புரமோஷன் செய்வதென்றால் அவர்களுக்குத் திருமணமாகப் போகிறது என்றும், நடிகர்களை வைத்து புரமோஷன் செய்வதென்றால் அரசியலுக்கு வரப்போகிறார் என்றும் வதந்தியை உருவாக்கும் முறையைத் தவிர்த்தால்தான் இந்திய சினிமா நல்ல வழிக்குத் திரும்பும்.

**-சிவா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share