தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் ஆன்டி இண்டியன். வலைதளத்தில் சினிமா விமர்சகராக பிரபலமான இளமாறன் எந்த தமிழ் படத்தையும், தனது விமர்சனங்களில் 99 சதவிகிதம் பாராட்டியது இல்லை. தனது வெள்ளந்தி தனமான கிராமிய பேச்சு வழக்கில் கொத்து புரோட்டா கணக்கில் போட்டு விமர்சிப்பவர் இளமாறன்.
இந்நிலையில், அவர் ஒரு படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளிவந்த போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதில் ஆச்சர்யம் இல்லை.
ஏனென்றால் உலக அளவில் சினிமா விமர்சகர்களாக இருந்த பலர் இயக்குனர்களாகி இருக்கிறார்கள். ஷான் – லுக் கொதார், ஃப்ரான்சுவா த்ருஃபோ போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து மிகச் சிறந்த இயக்குநர்களாகவும் உருவெடுத்தார்கள். இந்தியாவிலும் காலித் முகமத், மின்டி தேஜ்பால் போன்றவர்கள் விமர்சகர்களாக இருந்து இயக்குநர்களாக மாறியிருக்கிறார்கள். அதே பாணியில் தமிழ்த் திரையுலகில் மிகவும் அறியப்பட்ட சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை இளமாறன், ‘ஆன்டி இண்டியன்’ படத்தின் மூலம் இயக்குநராக உருவெடுத்துள்ளார்.
படம் முடிந்து தணிக்கைக்கு சென்றபோது திரையரங்குகளில் திரையிடும் தகுதி இல்லை என்று தடை செய்யப்பட்டது. மறுதணிக்கைக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு இல்லாத படங்கள் ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பும் ஆன்டி இண்டியன் படத்திற்கு இல்லாமல் போனது.
மத்திய அரசு அனைத்து துறைகளிலும் இருந்த டிரிப்யூனல் அமைப்பை கொரோனா காலத்தில் சத்தமின்றி கலைத்து உத்தரவிட்டது. இதனால் ஆன்டி இண்டியன் படக்குழு நீதிமன்ற கதவுகளை தட்டியது. படத்தை பார்ப்பதற்கு சிறப்புக் குழுவை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. படத்தை பார்த்த அக்குழுவினர் சில காட்சிகளை நீக்கினால் தணிக்கை சான்று வழங்கலாம் என கூறியது.
அதனை படக்குழு ஏற்றுக் கொண்டு தணிக்கை சான்றிதழ் பெற்று தமிழகத்தில் இன்று 228 திரைகளிலும், கர்நாடகாவில் 20 திரைகளிலும் வெளியாகிறது. இந்நிலையில், மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் படத்தில் இடம் பெற்றிருப்பதால் சிங்கப்பூரில் ஆன்டி இண்டியன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்து படத்தை திரையிட தடை விதித்துள்ளது சிங்கப்பூர் அரசு.
இது சம்பந்தமாக படத்தின் இயக்குநர் இளமாறனிடம் கேட்ட போது உண்மைதான் மறு தணிக்கைக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார். தமிழகத்தில் எனது படத்திற்கு 150 தியேட்டர்களாவது கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பில் இருந்தேன். தற்போது 228 திரையரங்கில் படம் வெளியாகிறது. அதேபோன்று சிங்கப்பூரில் சில தினங்களில் ஆன்டி இண்டியன் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து தடைகளை சட்டரீதியாக சந்தித்து இன்று வெளியாகும் ஆன்டி இண்டியன் படத்தை இயக்குனர் பாரதிராஜா வானளாவ புகழ்ந்து உள்ளார்.
படம் எதைப்பற்றி பேசுகிறது என்பதை பற்றிய சிறு முன்னோட்டம்…
சுவர் விளம்பரக் கலைஞரான இ.பாட்ஷாவை (இளமாறன்) யாரோ கொலை செய்து விடுகிறார்கள். அவருடைய தந்தை இஸ்லாமியர். தாய் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறியவர். இதனால், அவரது சடலத்தை அடக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களை வைத்துக்கொண்டு சிலர் செய்யும் அரசியல் ஒரு பக்கம் நடக்கிறது. அதே நேரம் அந்தத் தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கு, இந்த விவகாரத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் சில அரசியல்வாதிகள். முடிவில் என்ன ஆகிறது என்பது மீதிக் கதை.
பாட்ஷா என்ற பாத்திரம் இறந்து சடலமாகக் கிடப்பதிலிருந்து துவங்குகிறது படம். அந்தச் சடலத்தை ஒவ்வொரு இடுகாட்டிற்கும் கொண்டுசெல்வது, அங்கே அனுமதி மறுக்கப்பட, அதை வைத்து ஆளும்கட்சி, எதிர்கட்சி, மதவாத அமைப்புகள் அரசியல் செய்வதை பேசுகிறது திரைப்படம். இந்தப் படத்தில் புளு சட்டை இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், பசி சத்யா, ஜெயராஜ், விஜயா, கர்ணராஜா, மறைந்த நடிகர்கள் மாறன், சுபா வெங்கட் நடித்திருக்கிறார்கள்.
** – அம்பலவாணன் **
�,